செய்திகள்
போராட்டம்

வாணியம்பாடியில் ரேஷன் கடை இடமாற்றம் செய்வதை கண்டித்து சாலை மறியல்

Published On 2020-11-13 04:17 GMT   |   Update On 2020-11-13 04:17 GMT
ரேஷன் கடையை புதிதாக திறக்கப்பட்டுள்ள கடைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை கண்டித்து பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி-நேதாஜி நகர் வடக்கு பகுதியில் ரேஷன் கடை எண்-10 செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 29, 30-வது வார்டு பகுதி ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் நேதாஜி நகர் வடக்கு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. நேற்று முன்தினம் அந்த கடை திறக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 30-வது வார்டு பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையை புதிதாக திறக்கப்பட்டுள்ள கடைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை கண்டித்து பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வெகுநேரமாகியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வாணியம்பாடி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News