செய்திகள்
பாலக்கோடு மார்க்கெட்டில் சாலையில் தக்காளிகளை கொட்டி அவற்றை மிதித்து அழித்த போது எடுத்த படம்.

கடும் விலை வீழ்ச்சி- பாலக்கோட்டில் தக்காளியை சாலையில் கொட்டி அழித்த விவசாயிகள்

Published On 2020-11-09 14:43 GMT   |   Update On 2020-11-09 14:43 GMT
கடும் விலை வீழ்ச்சியால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் பாலக்கோட்டில் தக்காளியை சாலையில் கொட்டி மிதித்து அழித்தனர்.
பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இவ்வாறு விளைவிக்கும் தக்காளியை பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 500 முதல் 800 டன் அளவிற்கு தக்காளி கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வழக்கத்தை விட அதிகமான பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். இதனால் தற்போது விளைச்சல் அதிகரித்து மார்க்கெட்டிற்கு அதிகளவில் தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இதன் காரணமாக கடந்த வாரம் கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.1-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். உரிய லாபம் கிடைக்காத விவசாயிகள் ஆத்திரமடைந்து தக்காளியை சாலையில் கொட்டி அவற்றை காலால் மிதித்து அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் மார்க்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால், எங்களுக்கு உரிய லாபம் கிடைக்கவில்லை. சாகுபடிக்காக செய்யப்பட்ட செலவுத்தொகை கூட கிடைக்கவில்லை. விவசாய தோட்டத்தில் இருந்து மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்கு வாடகை வாகனத்துக்கு கூட பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் தக்காளிகளை சாலையில் கொட்டி அழித்தோம் என்றனர்.
Tags:    

Similar News