செய்திகள்
கமல்ஹாசன்

ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்

Published On 2020-10-22 21:53 GMT   |   Update On 2020-10-22 21:53 GMT
ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை:

சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, வடபழனி, எம்.எம்.டி.ஏ, கோயம்பேடு, எழும்பூர், பாரிமுனை, மதுரவாயல், வானகரம், ராயப்பேட்டை, காசிமேடு, கோடம்பாக்கம், சூளைமேடு புறநகர் பகுதிகளான தாம்பரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் புறநகர் பகுதியின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதற்கிடையே, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மழைநீர் புகுந்தது. உடனே மழைநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை இயக்குநர் எழிலரசி தெரிவித்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது.

கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை. குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. 

கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News