செய்திகள்
தஞ்சை சுந்தரம்நகர் பகுதி லட்சுமிபுரத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை படத்தில் காணலாம்.

தஞ்சை சுந்தரம் நகர், லட்சுமிபுரத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2020-10-21 14:29 GMT   |   Update On 2020-10-21 14:29 GMT
தஞ்சை சுந்தரம் நகர், லட்சுமிபுரத்தில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிள்ளையார்பட்டி:

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள சுந்தரம் நகர் 11-வது தெருவின்அருகே உள்ள லட்சுமிபுரத்தில் உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக குழி தோண்டி பாதாள சாக்கடைக்கு கான்கிரீட் அமைத்து விட்டு சாலையை சமன் செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மோசமாக உள்ள சாலையில் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் சென்று வரவும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சை மாநகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த ரோடு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மழை நீர் தேங்கி இருப்பதால் ரோட்டில் உள்ள குழிகள் தெரியாமல் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் குழிக்குள் தவறி விழுந்து விடுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தண்ணீர் நிரம்பி நிற்கும் குழிகள் தெரியாமல் வாகனங்களை இயக்குவதால் தொடர் விபத்துகளும் நடந்து வருகிறது.

மிகவும் வளைவான இந்த சாலையின் வழியாகதான் திருப்பதி நகர், எல்.ஐ.சி.காலனி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்த சாலையானது முக்கியமான பிரிவு சாலையாக உள்ளதால் மோசமாக உள்ள இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News