செய்திகள்
மழை

தமிழகத்தில் அனேக இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-10-10 04:27 GMT   |   Update On 2020-10-10 04:27 GMT
அந்தமானில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் இன்று அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அந்தவகையில் தமிழகத்தில் இன்று அனேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். நேற்று உருவாகிய இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 12-ந்தேதி(நாளை மறுதினம்) வடக்கு ஆந்திர கடல்பகுதியில் கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல்பகுதி மற்றும் வடக்கு ஆந்திரா கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘போளூர் 12 செ.மீ., கலசப்பாக்கம் 11 செ.மீ., மரந்தஹள்ளி 7 செ.மீ., ஓசூர், ஊத்தங்கரை, ஊட்டி தலா 6 செ.மீ., கிருஷ்ணகிரி, மணிமுத்தாறு, தர்மபுரி, வைகை அணை, கேபிரிட்ஜ் தலா 5 செ.மீ.’ உள்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News