செய்திகள்
திமுக தலைவர் முக ஸ்டாலின்

தொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் மொழி சேர்ப்பு- மு.க.ஸ்டாலின் வரவேற்பு

Published On 2020-10-09 06:09 GMT   |   Update On 2020-10-09 06:09 GMT
மத்திய தொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் மொழி இணைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை:

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல்துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழ் மொழி ஆர்வலர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தமிழ் மொழி மீது திட்டமிட்டு கலாச்சார படையெடுப்பு நடத்தப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். மத்திய அரசு தொடர்ந்து தமிழ் மொழி மீது பாரபட்சம் காட்டி வருவதாக பலர் குற்றம் சாட்டி வந்தனர்.

இதையடுத்து தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்து, தொன்மையான வரலாறு உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில், தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்து நேற்று கடிதம் எழுதினார்.

இந்நிலையில்  மத்திய தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழை சேர்த்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய தொல்லியல் படிப்புக்கான கல்வி தகுதியில் தமிழ்மொழி இணைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கிறேன். மொழிகளே, பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News