செய்திகள்
ரேஷன் அரிசி பறிமுதல்

கொடைக்கானலுக்கு கடத்த முயன்ற 80 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2020-10-06 09:08 GMT   |   Update On 2020-10-06 09:08 GMT
கோவில்பட்டியில் இருந்து கொடைக்கானலுக்கு கடத்த முயன்ற 80 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எட்டயபுரம் சாலையில் தனியார் மண்டபத்துக்கு அருகே நின்ற ஒரு வேன் டிரைவர், போலீசார் வருவதை பார்த்தவுடன், உடனடியாக வேனை எடுத்துச் செல்ல முயன்றார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் வேனை மடக்கி பிடித்து, டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் திண்டுக்கலை சேர்ந்த ராஜ்மோகன் (வயது 30) என்பது தெரியவந்தது. வேனை சோதனையிட்டபோது அதில் தலா 50 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி 80 மூட்டைகள் இருந்தன.

இவை ஆலையில் குருணையாக அரைக்கப்பட்டு மூட்டைகளாக கட்டப்பட்டிருந்தது. கோவில்பட்டியில் இருந்து இந்த அரிசி மூட்டைகளை கொடைக்கானலுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கோழி தீவனத்துக்காக கொண்டு செல்ல இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வேனை பறிமுதல் செய்து, டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News