செய்திகள்
எச். ராஜா

எச்.ராஜாவும் விடுவிப்பு- நிர்வாகிகள் நியமனத்தில் தமிழகத்தை புறக்கணித்த பாஜக மீது தொண்டர்கள் அதிருப்தி

Published On 2020-09-27 10:38 GMT   |   Update On 2020-09-27 10:38 GMT
பாஜக தேசிய நிர்வாகிகள் நியமனத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு கூட பதவி வழங்காதது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை:

பா.ஜனதா கட்சி விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தல் நடத்தி கிளை பொறுப்பு முதல் அகில இந்திய நிர்வாகிகள் வரை தேர்வு செய்யப்பட வேண்டும்.

அதன்படி கடந்த ஜனவரி 20-ந் தேதி அகில இந்திய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து அகில இந்திய அளவில் கட்சியை வலுப்படுத்த புதிய நிர்வாகிகள் நியமிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வந்தார். புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று வெளியிட்டார்.

முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய பிரதேச முதல்வர் ரமன்சிங், முன்னாள் மத்திய மந்திரி ராதாமோகன்சிங், டி.கே.அருணா, அப்துல்லாகுட்டி உள்பட 12 பேர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பூபேந்தர் யாதவ், அருண்சிங், கைலாஷ், என்.டி.ராமராவின் மகள் புரந்தரேஸ்வரி, கர்நாடக எம்.எல்.ஏ. சி.டி.ரவி உள்பட 8 பேர் தேசிய பொது செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

அமைப்பு பொது செயலாளர்களாக பி.எல்.சந் தோஷ், செயலாளர்களாக பிஜேஸ்வர்துடு உள்பட 13 பேரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

புதிய நிர்வாகிகளில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் 14 பேர்.

பா.ஜனதா தொடங்கிய காலத்தில் இருந்து இப்போது தான் முதல் முறையாக தேசிய அளவில் ஒருவருக்குகூட பதவி வழங்காமல் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

1980-ல் கட்சி தொடங்கப்பட்டபோது தமிழகத்தை சேர்ந்த ஜணா. கிருஷ்ண மூர்த்தி தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் தேசிய தலைவர் பதவிவரை உயர்ந்தார்.

2001-ம் ஆண்டு பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்றார். எம்.பி., மத்திய சட்ட மந்திரி பொறுப்புகளையும் வகித்தவர். காமராஜருக்கு பிறகு தேசிய கட்சி ஒன்றிற்கு தேசிய தலைவர் ஆன தமிழர் என்ற பெருமை பெற்றார்.

அதன் பிறகு இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா ஆகியோரும் தேசிய செயலாளர்களாக இருந்துள்ளார்கள்.

எச்.ராஜா கடந்த 6 ஆண்டுகளாக தேசிய செயலாளராகவும், கேரள பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்தார். எச்.ராஜாவுக்கு தற்போது எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு கூட பதவி வழங்காதது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முரளிதரராவ் தேசிய செயலாளராகவும் தமிழக பொறுப்பாளராகவும் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கும் எந்த பதவியும் வழங்கப்பட வில்லை.

ஆனால் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த டி.கே.அருணா தேசிய துணை தலைவராகவும், டாக்டர் கே.லட்சுமண் பிற்பட்டோர் பிரிவின் தேசிய தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

முரளிதரராவ் பொறுப்பில் இருந்தபோது தமிழகத்தில் பா.ஜனதா எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. நாடு முழுவதும் மோடி அலை வீசி 2 முறை பா.ஜனதா அமோக வெற்றி பெற்றும் தமிழகத்தில் சாதிக்க முடியவில்லை என்பது மேலிடத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே புதிய பொறுப்பாளர் நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும் தெலுங்கானாவில் கணிசமாக இருக்கும் வேல்மா சமூகத்தினர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை ஆதரிக்கிறார்கள். அதே சமூகத்தை சேர்ந்த முரளிதரராவால் அந்த சமூகத்தை கவர முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

காங்கிரசில் இருந்து விலகி கடந்த ஆண்டு பா.ஜனதாவில் இணைந்த தெலுங்கானாவை சேர்ந்த டி.கே.அருணாவுக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் ஒக்காலிகர் சமூகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்தும் நோக்கில் சி.டி.ரவிக்கு பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

எது எப்படி ஆயினும் 39 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்காதது சரி அல்ல என்று தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் பலர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News