செய்திகள்
சாமிதோப்பு உப்பளத்தில் மழைநீர் புகுந்ததால் குளம் போல் காட்சி அளித்ததை காணலாம்

தொடர் மழை- சாமிதோப்பில் உப்பள தொழில் பாதிப்பு

Published On 2020-09-24 10:27 GMT   |   Update On 2020-09-24 10:27 GMT
குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாமிதோப்பில் உப்பள தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
தென்தாமரைகுளம்:

குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ரப்பர் பால் வடிக்கும் தொழில், செங்கல் உற்பத்தி ஆகியவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதே போல் உப்பள தொழிலும் பாதிப்படைந்தது.

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உப்பளங்கள் உள்ளன. ஆனால் சாமிதோப்பு பகுதியில் உள்ள உப்பளத்தில் மட்டுமே தற்போது தொழில் நடைபெறுகிறது. இங்கு சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட உப்பளத்தில் 100 ஏக்கரில் மட்டுமே தொழில் நடைபெற்று வருகிறது.

உப்பள தொழிலில் பொதுவாக ஏப்ரல், மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் உச்சக்கட்ட உப்பு உற்பத்தி நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தொற்றின் காரணமாக வாகன போக்குவரத்திற்கு தடை இருந்ததால், உப்பளத்தொழில் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து உப்பளத்தில் தொழிலாளர்கள் வேலையை தொடங்கினார்கள். அவர்கள் உப்பள பாத்திகளை சீரமைத்து, பதப்படுத்தி தொழில் செய்து வந்தனர்.

ஒவ்வொரு முறை உப்பள தொழில் தொடங்கும் போதும் 45 நாட்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த முறை உப்பு உற்பத்தி செய்யும்போது தொடர் மழை பெய்தது. இதனால் மழைநீர் உப்பள பாத்திகளில் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் உப்பள தொழிலாளர்கள் செய்த முதலீடு அனைத்தும் இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் உப்பள தொழிலாளர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் உப்பள தொழில் நலிவுற்று வருவதற்கு பெரிதும் காரணமாக இருப்பது இப்படிப்பட்ட இயற்கை சீற்றங்கள் தான். உப்பள தொழிலை நம்பி 100 குடும்பங்கள் உள்ளன. உப்பள தொழில் தொடங்கி பலன் கிடைக்கும் நேரத்தில் இப்படிப்பட்ட இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உப்பள தொழிலாளர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே நலிந்து வரும் இந்த தொழிலை காப்பாற்ற, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News