செய்திகள்
பா.ஜனதா கொடி கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

மதுரவாயல் மேம்பாலம் அருகே அமைக்கப்பட்ட பா.ஜனதா 70 அடி உயர கொடி கம்பம் அகற்றம்

Published On 2020-09-18 19:42 GMT   |   Update On 2020-09-18 19:42 GMT
மதுரவாயல் மேம்பாலம் அருகே அமைக்கப்பட்ட பா.ஜனதா 70 அடி உயர கொடி கம்பம் ஒரே நாளில் அகற்றப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் மதுரவாயல் மேம்பாலம் அருகே பா.ஜனதா சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட 70 அடி உயர கொடிகம்பத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்ததுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிலையில் கொடி கம்பம் மிக உயரமாக இருப்பதாகவும், விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி இல்லாமல் இருப்பதாகவும் கூறி நேற்று முன்தினம் நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு அந்த கல்வெட்டை இடித்து தரைமட்டமாக்கியதுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த 70 அடி உயர பா.ஜ.க. கொடி கம்பம் மற்றும் அருகில் இருந்த தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் கொடி கம்பங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்ட கொடிகம்பம் ஒரே நாளில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையறிந்த பா.ஜனதா நிர்வாகிகள் நேற்று காலை கொடிகம்பம் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்டு சென்றனர். அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மதுரவாயல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதற்கிடையே நேற்று மாலை பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் அங்கு குவிந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர்.

ஆனால் அதற்கு மறுத்த அவர்கள், மீண்டும் அதே இடத்தில் அகற்றப்பட்ட பா.ஜ.க. கொடிகம்பத்தை வைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் முழக்கமிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் ஜவகர் ஆகியோர் பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த பா.ஜ.க.வினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் இருபுறமும் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று சாலை மறியலை கைவிட்டு சாலையின் ஓரம் நின்றனர். பின்னர் கொடிகம்பம் அகற்றப்பட்ட இடத்தில் உடனடியாக வேறு ஒரு சிறிய கொடிகம்பம் நடப்பட்டு பா.ஜ.க. கொடி ஏற்றப்பட்டது.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை கைது செய்த போலீசார், அனைவரையும் தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Tags:    

Similar News