செய்திகள்
சிமெண்ட்

சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரி வழக்கு -4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-08-31 10:30 GMT   |   Update On 2020-08-31 10:30 GMT
சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் சிமெண்டுக்கு விலை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு முன் 340 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை சிமெண்ட் விலை, 13.23 சதவீதம் அதிகரித்து, 395 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிமெண்ட் விலையை நிர்ணயிப்பது தொடர்பாக கொள்கை முடிவெடுக்கும்படி, தமிழக அரசுக்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கருத்தில் கொள்ளாமலும், நியாயமான விலை நிர்ணயிக்க கோரிய தன்னுடைய மனுவையும் நிராகரித்த தமிழக அரசு, குறைந்த விலையில் சிமெண்ட் விற்கும் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் அல்லது அம்மா சிமெண்ட்டை வாங்கும்படி தெரிவிப்பதாக மனுவில் புகார் கூறப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 80 லட்சம் டன் சிமெண்ட் தேவைப்படும் நிலையில், அம்மா சிமெண்ட் மற்றும் தமிழ்நாடு சிமெண்ட் கழகங்கள் 7 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்வதாகவும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை விட மூட்டைக்கு 65 ரூபாய் அதிகமாக தமிழகத்தில் சிமெண்ட் விற்கப்படுவதால், தமிழகத்தில் சிமெண்டுக்கு விலை நிர்ணயிக்கும்படி, அரசுக்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் தொழில் துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது.
Tags:    

Similar News