செய்திகள்
மருத்துவர் திருவேங்கடம்

5 ரூபாய் மருத்துவர் மறைவு- முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

Published On 2020-08-16 07:48 GMT   |   Update On 2020-08-16 07:48 GMT
ஐந்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த 70 வயதான மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் நேற்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

சென்னை வியாசர்பாடியில் மருத்துவர் திருவேங்கடம் என்பவர் 5 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். ஆரம்ப காலத்தில் அவர் 2 ரூபாய்க்கு மட்டுமே மருத்துவம் பார்த்து சேவையாற்றி வந்தார்.

இந்நிலையில், 70 வயதான திருவேங்கடம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13-ம் தேதி தெற்கு ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு, அவர் நள்ளிரவில் காலமானார். இது,அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், பிரீத்தி என்ற மகளும் தீபக் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் வரை செல்போன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐந்து ரூபாய் டாக்டர் என அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் வீரராகவன் மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சிகிச்சை மருத்துவ சேவை வழங்கியுள்ளார். மருத்துவரை இழந்து வாடும் குடும்பத்தார், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி மக்களுக்கு இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “1973ஆண்டில் 2ரூபாயில் தொடங்கி அண்மையில் 5 ரூபாயில் ஏழை எளியோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து வந்த வடசென்னை மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் மருத்துவருக்கு எனது இதய அஞ்சலி!” கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் 'மக்கள் டாக்டர்' திருவேங்கடம்! எளிய மக்களின் உயிர் காக்கும் அன்புக்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்" என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News