செய்திகள்
முக ஸ்டாலின்

ரஷ்ய நதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களுக்கு முக ஸ்டாலின் இரங்கல்

Published On 2020-08-10 17:50 GMT   |   Update On 2020-08-10 17:50 GMT
ரஷ்ய நதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

ரஷியாவின் ஓல்கொகார்ட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகிய 4 பேரும் மருத்துவம் படித்து வந்தனர்.

அங்குள்ள மருத்துவ பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவர்களுடன் தங்கி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு 10-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுடன் சென்ற இவர்கள் பின்னர் நண்பர்களுடன் நதியில் இறங்கி குளித்து விளையாடினர்.

அப்போது மாணவர் ஒருவர் நீரில் அடித்து செல்வதை பார்த்த ஸ்டீபன், அவரை காப்பாற்ற முயன்றார். அதில் ஸ்டீபனும் நீரில் அடித்துச்செல்ல, அதை கண்ட மேலும் 2 மாணவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் ஸ்டீபன், முகமது ஆஷிக், ராமு விக்னேஷ், மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகிய 4 பேரும் நதியில் அடித்துச்செல்லப்பட்டனர்.

சில மணிநேரத்துக்கு பிறகு ஸ்டீபன் உள்பட 4 பேரின் உடல்களும் கரை ஒதுங்கியது. 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சக மாணவனை காப்பாற்ற முயன்று 4 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரஷ்யாவில் நதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆற்றில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக, சுழற்சியில் சிக்கி 4 மாணவர்களும் உயிரிழந்தனர் என்ற செய்தி மனம் உடைந்து போனதாகவும். இந்த கடினமான நேரத்தில் உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News