செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கைக்கு தடை இல்லை- ஐகோர்ட்டு

Published On 2020-08-08 01:59 GMT   |   Update On 2020-08-08 01:59 GMT
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், மீனவர் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், “நாட்டில் உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்துதல், புதிதாக தொழிற்சாலைகள் தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்காக சில கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்டது. இந்த சட்டத்திருத்த வரைவு அறிக்கை குறித்து பொது மக்கள் தங்களது கருத்துக்களை 60 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் இந்த வரைவு அறிக்கை குறித்து தங்களது கருத்துக்களை பொதுமக்களால் தெரிவிக்க இயலாது. எனவே, இந்த வரைவு அறிக்கையை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து மக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை இந்த சட்டத்திருத்த வரைவு அறிக்கைக்கு தடை விதிக்கவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் மத்திய அரசு பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் குமரகுரு, “ஏற்கனவே இந்த சட்டவரைவுக்கு கர்நாடகா ஐகோர்ட்டு வருகிற செப்டம்பர் 7-ந்தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளதால், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்” என்றார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜி.ஸ்டான்லி ஹப்சன் சிங், “கர்நாடகா ஐகோர்ட்டு விதித்துள்ள தடை எதிர்காலத்தில் நீக்கக்கூடியது. எனவே, இந்த சட்ட வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும்வரை தடை விதிக்கவேண்டும். இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கையை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக பொதுவான இணையதளத்தில் மத்திய அரசு வெளியிடவில்லை. உரிமம் கேட்டு தொழிற்சாலைகள் விண்ணப்பிக்கும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதனால் இந்த சட்டத்திருத்த அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்திலும், கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளத்திலும் வெளியிட உத்தரவிட வேண்டும். பொதுமக்கள் அவற்றை படித்து புரிந்து கொண்டு, அரசுக்கு கருத்து தெரிவிக்க வழிவகை செய்யவேண்டும்” என்று வாதிட்டார்.

இதையடுத்து, இந்த சட்டவரைவு அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர். “ஏற்கனவே கர்நாடகா ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. அந்த தடை நீக்கப்பட்டால், மனுதாரர் எப்போது வேண்டுமானாலும் இந்த ஐகோர்ட்டை நாடலாம். மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளத்தில் இந்த சட்டதிருத்த வரைவை வெளியிட வேண்டும் என்று கூறுவதால், தமிழக அரசை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்க்கிறோம்.

இந்த சட்டதிருத்த வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் கூடிய பதில் மனுவை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை செப்டம்பர் 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News