செய்திகள்
மதுரை ஐகோர்ட்

குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-08-06 22:11 GMT   |   Update On 2020-08-06 22:11 GMT
ஆண்டிபட்டியில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த கோபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அன்னை சத்யாநகர் பகுதியில் அரசு அலுவலகங்களும், பள்ளி, கல்லூரிகளும், வழிபாட்டுத்தலங்களும் உள்ளன. மேலும் தேனியில் இருந்து ஆண்டிபட்டிக்கும், வைகை அணைக்கும் செல்லும் சாலைகளும் இந்த பகுதியை கடந்து தான் செல்கின்றன.

இதனால் எப்போதும் மக்கள் நெருக்கமாகவே இப்பகுதி காணப்படும். இந்தநிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.

ஆனால் தற்போது ஊரடங்கை பயன்படுத்தி இந்த பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட குடியிருப்பில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் டாஸ்மாக் பார் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயன்படுத்திய குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் அப்புறப்படுத்தாமல் விடப்பட்டுள்ளன.

இந்த கடையால் அருகில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுபவர்கள் உள்பட பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். இது ஏற்கத்தக்கதல்ல. எனவே சத்யாநகர் பகுதி பொதுமக்களின் நலன் கருதி, டாஸ்மாக்கடை, பார் ஆகியவற்றை நிரந்தரமாக அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.காந்தி ஆஜராகி, “இதே கட்டிடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வேறொரு இடத்தில் செயல்பட்ட டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்தன. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கட்டிடத்தில் டாஸ்மாக் கடை தொடங்கப்படாது என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் கழித்து இப்போது அதே கட்டிடத்தில் டாஸ்மாக் கடையை தொடங்கி, நடத்தி வருகின்றனர்” என வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “டாஸ்மாக் கடைகளில் இருந்து வரும் வருமானத்தை பல்வேறு துறைகளுக்கு செலவிடுவதாக கூறினாலும், டாஸ்மாக் கடைகளால் எந்த ஒரு பொதுநலனும் இல்லை” என்றனர்.

விசாரணை முடிவில், “அன்னை சத்யா நகர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை மற்றும் பார் ஆகியவற்றை உடனடியாக மூட வேண்டும். இந்த கடை அமைந்துள்ள பகுதிகளில் தேனி கலெக்டர் ஆய்வு நடத்த வேண்டும். அதேபோல மதுபான பார்களில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக அகற்றப்படுகிறதா, மதுபாட்டில்கள் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு தான் விற்கப்படுகிறதா, மதுக்கடைகளில் கூட்டத்தை முறைப்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமி நாசினி பயன்படுத்துவது ஆகியவை கடைபிடிக்கப்படுகிறதா என்பதை டாஸ்மாக் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் விசாரணையை செப்டம்பர் மாதம் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News