என் மலர்
நீங்கள் தேடியது "madurai high court"
- மதுரை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
- இந்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அனுப்பானடி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மனைவி தாமரைச்செல்வி. இவர் தெப்பக்குளம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு தெப்பக்குளத்தை சேர்ந்த வெற்றிச்செல்வம், அவரது மனைவி கவுரி ஆகியோர் அறிமுகமானார்கள். அப்போது ஐகோர்ட்டில் அதிகாரிகள் பலரை எங்களுக்கு தெரியும். நீங்கள் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்தால் ஐகோர்ட்டில் உறுதியாக வேலை வாங்கி விடலாம் என ஆசை வார்த்தை கூறினர்.
இதை நம்பி நான் மற்றும் எனக்கு தெரிந்த உறவினர் தனலட்சுமி ஆகியோர் ரூ.4 லட்சம் ரூபாய் வரை கொடுத்தோம். பணத்தை பெற்றுக்கொண்ட தம்பதியினர் பணி நியமன ஆணையை எங்களிடம் கொடுத்தனர்.
அதை கோர்ட்டு அலுவலகத்தில் சென்று காண்பித்தபோது, பணி ஆணை போலியானது என தெரியவந்தது. இதையடுத்து ரூ.4 லட்சத்தை திருப்பித்தருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுக்கின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் தெப்பக்குளம் போலீசார், கணவன்-மனைவியிடம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் ராஜன். கிரானைட் நிறுவனம் நடத்தி வரும் இவர், அண்ணாநகர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த சூரகண்டி மனைவி வனிதா எங்கள் நிறுவனத்திற்கு வந்தார். அவர் கட்டுமானத்திற்காக கடன் அடிப்படையில் கிரானைட் கற்களை வாங்கிச்சென்றார். இதற்காக அவர் ரூ.20 லட்சம் தர வேண்டியுள்ளது. ஆனால் அவர் தற்போது வரை பணம் தராமல் இழுத்தடித்து வருகிறார்.
எனவே வனிதா மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 34 மாநகராட்சி கடைகள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்த அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
- திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட நேரிடும்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் திண்டுக்கல் மாநகராட்சி உறுப்பினராக உள்ளேன். திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் காமராஜர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள 34 கடைகள் வாடகைக்கு விடுவதற்கான ஏல அறிவிப்பை நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் கடந்தாண்டு நவம்பர் 17-ந் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் 34 கடைகளுக்கான ஏலம் நடந்தது.
இதில் மொத்தமாக 47 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ்நாடு வெளிப்படை தன்மை ஏல அறிவிப்புச் சட்டத்தின் படி ஏலம் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு உள்ளூர் அல்லது மாவட்ட அளவிலான செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும். அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஏலம் அவ்வாறு நடைபெற வில்லை.
எனவே திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள 34 மாநகராட்சி கடைகள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்த அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து மீண்டும் ஏல அறிவிப்பை முறையாக வெளியிட்டு முறையாக ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் திண்டுக்கல் மாநகராட்சி கடைகளுக்கான ஏல அறிவிப்பில் விதி முறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாநகராட்சி 34 கடைகளுக்கான ஏலத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. தமிழ்நாடு ஏல அறிவிப்புச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை. பொதுமக்களின் பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட நேரிடும்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான 34 கடைகளில் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்ப ட்டவர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஏல அறிவிப்பின் கீழ் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சி கடைகள் ஏலம் குறித்து வருகிற 23-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
- குறிப்பிட்ட சிலரை மட்டும் பணிக்கு நியமித்து உத்தரவிட்டு உள்ளனர்.
- பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு நேர்முக தேர்வு நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக பணி நியமனங்களை மேற்கொள்ளும்படி உத்தரவிட வேண்டும்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்த நித்யா. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
கடந்த 9.9.2022 அன்று குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளர் பணி நியமனம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின்படி நான் அந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தேன்.
அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி நேர்முகத் தேர்வுக்காக அழைத்திருந்தனர். குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நான் கல்வி சான்றிதழ்களுடன் சென்றிருந்தேன். என்னுடைய கல்வி சான்றிதழ்களை அங்கு பெற்றுக் கொண்டனர். என்னை போலவே அங்கு வந்த பலரிடமும் நேர்முகத் தேர்வை நடத்தாமல் சான்றிதழ்களை மட்டும் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் குறிப்பிட்ட சிலரை மட்டும் அந்த பணிக்கு நியமித்து உத்தரவிட்டு உள்ளனர். நேர்முக் தேர்வே நடத்தாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனம் அளித்து இருப்பது ஏற்புடையதல்ல.
எனவே அந்தப் பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு நேர்முக தேர்வு நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக பணி நியமனங்களை மேற்கொள்ளும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சுந்தர் ஆஜராகி, விண்ணப்பித்தவர்களுக்கு உரிய முறையில் தேர்வு நடத்தாமல் முறை கேடாக பணி நியமனம் அளித்திருப்பது சட்ட விரோதம். அந்த பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- அரசு தரப்பில், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
- சம்பந்தப்பட்ட பெண்ணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
மதுரை:
தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறேன். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்க்கிறேன்.
இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்தவா் நவீன்பட்டேல், இவரது மகளான குருத்திகாபட்டேலும், நானும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். இதற்கு இடையில் தன்னுடைய மகளைக் காணவில்லை எனக் கூறி நவீன்பட்டேல் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தார்.
இதனையடுத்து ஜனவரி 4-ந் தேதி நானும், எனது மனைவி குருத்திகாபட்டேலும் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானோம். விசாரணையின் முடிவில் குருத்திகா பட்டேல், என்னுடன் செல்வதாகக் கூறியதையடுத்து நான் அவரை அழைத்து சென்றேன்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதியன்று எனது மனைவியுடன் தென்காசியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு வந்த நவீன்பட்டேல் மற்றும் அவரது மனைவி தா்மிஸ்தா பட்டேல் என்னுடன் தகராறில் ஈடுபட்டனா்.
இது குறித்து நான் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகாா் செய்தேன். அந்த மனு மீதான விசாரணைக்காக ஜனவரி 25-ந் தேதி நானும், குருத்திகாபட்டேலும், தந்தை, சகோதரா் ஆகியோருடன் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினேன். ஆனால், நவீன்பட்டேல் மாலையில் போலீஸ் நிலையம் வருவதாகக் கூறி சென்றார்.
இந்த நிலையில் நான் எனது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையம் சென்று மீண்டும் காரில் கொட்டாகுளத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது நவீன்பட்டேல், தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்டோா் என்னை தாக்கி குருத்திகா பட்டேலை கடத்தி சென்றனர்.
நான் இது குறித்து குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தேன். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், குருத்திகா பட்டேலை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் குருத்திகா பட்டேலை கடத்தி சென்றுவிட்டனர். எனவே, குருத்திகா பட்டேலை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், அரசு தரப்பில், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட குருத்திகா பட்டேல் அனுப்பினால் விசாரணை பாதிக்கும். மேலும் குருத்திகா பட்டேல் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். அதனால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குருத்திகா பட்டேலை அனுப்ப நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறட்டும். இது ஆட்கொணர்வு மனு. சம்பந்தப்பட்ட பெண் மேஜராக உள்ளார். எனவே சம்பந்தப்பட்ட பெண்ணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
- கோவில் திருவிழாக்கள், கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக்கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம்.
- உரிய உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து 3 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை:
கன்னியாகுமரி மாவட்டம் மாதவாலயம் பகுதியை சேர்ந்த சையத் அலி பாத்திமா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் மாதவாலயம் கிராமத்தில் வசித்து வருகிறேன்.
எனது வீட்டின் அருகே அனுமதியின்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுகிறது. இந்த மாட்டிறைச்சி கடையால் எங்கள் குடியிருப்பு பகுதி மக்கள் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இந்த மாட்டிறைச்சி கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
கிராம பஞ்சாயத்து தரப்பில், மாட்டிறைச்சி கடை வைத்திருப்பவர், ஒரு கோழி இறைச்சி கடை நடத்துவதற்கு மட்டுமே உரிமம் பெற்றுள்ளார். ஆனால் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடை நடத்துகிறார் என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதி, உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல், எந்த ஒரு நபரும், எந்த இடத்திலும் கால்நடைகள், செம்மறி ஆடு, பன்றி ஆகியவற்றை வெட்ட அனுமதிக்கக்கூடாது. கோவில் திருவிழாக்கள், கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக்கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம்.
மேலும் இந்த வழக்கில் உள்ளாட்சி அமைப்பின் உரிய உரிமம் பெறாமல், மாட்டிறைச்சி கடை நடத்தி வருவதாக உள்ளாட்சி தரப்பு வக்கீல் கூறியுள்ளார். எனவே உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து, தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் 3 வாரங்களுக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
- போலி இணையதளங்களை இயக்குவோர் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
மதுரை:
கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனு, இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அதில், தமிழகம் முழுவதும் கோயில் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான, போலி இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- குளத்தில் இருக்கும் நீரினை நம்பியே சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய கிராமம் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
- டெண்டர் நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணிதுறைச் செயலாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மதுரை:
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். ஆலங்குளம் கிராமத்திற்கு அருகே தொட்டியன்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இது சுமார் 88 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த குளத்தில் இருக்கும் நீரினை நம்பியே சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய கிராமம் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினர் குளத்தை சரியாக தூர்வாராத காரணத்தினால் அங்கு சீமை கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன.
இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் இல்லாமல் நிலங்கள் வறண்டு காணப்படுகிறது. தொட்டியம்குளம் கண்மாயில் தற்போது கழிவுநீர் உள்பட கழிவுப் பொருட்களும் தேங்கி உள்ளது.
எனவே தென்காசி, ஆலங்குளம் கிராமத்தில் உள்ள தொட்டியங்குளம் கண்மாயை முறையாக தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், தென்காசி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக டெண்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மூலம் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கலாமே எனவும், தென்காசி, ஆலங்குளம், தொட்டியங்குளம் கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை மட்டுமின்றி தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள சீமைகருவேலம் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாமே என கருத்து தெரிவித்து, சீமை கருவேல மரங்கள் அகற்றுவதற்கான டெண்டர் நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணிதுறைச் செயலாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
- பாதிக்கப்பட்டவரின் தாய் புகாரளித்த பிறகு தான் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல்(வயது57). இவர் பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மற்றும் 4-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி டெய்சி தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது அரசு கூடுதல் வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி வழக்கின் விசாரணை துரிதமாக நடந்து வருகிறது. மொத்தமுள்ள 30 சாட்சிகளில் 19 சாட்சியங்கள் மீதான விசாரணை முடிந்துள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தலைமை ஆசிரியர் 7.5.2022-ல் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளார். ஆனால் 5 நாட்களில் புத்தகத்தை சிறையில் வழங்கியுள்ளனர். அதை பெற்றுக் கொண்டதற்காக சம்பந்தப்பட்ட வரும் கையெழுத்திட்டுள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் தாய் புகாரளித்த பிறகு தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே குண்டர் சட்ட நடவடிக்கையில் எந்த சட்டவிரோதமும் இல்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
- மனுதாரரின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பவுசியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நானும், எனது கணவர் முகமதுஅலி ஜின்னாவும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வசித்து வருகிறோம். எனது கணவர் இருசக்கர வாகனத்தில் சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இதுவே எங்களது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
தினசரி வியாபாரத்துக்கு காலை 5 மணிக்கு சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார். ஆனால் கடந்த 8-ந் தேதி வியாபாரத்திற்காக சென்ற எனது கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
எனது கணவரின் நண்பர்கள் கொடுத்த தகவலின்படி எனது கணவர் பழனி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது. உடனே நானும் எனது குடும்பத்தாரும் பழனி போலீஸ் நிலையத்திற்கு சென்றபோது, அவரை பார்க்கவிடாமல் போலீசார் தடுத்தனர். அடுத்த நாள் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்பொழுது அவர் உடம்பு முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவரிடம் நாங்கள் பேசியபோது, டீ வியாபாரம் செய்தபோது ஒரு பெண்ணை நான் கேலி செய்ததாக கூறி அங்கிருந்தவர்கள் தன்னை தாக்கி புகார் அளித்ததால், போலீசார் கைது செய்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை என்றார். தற்போது எனது கணவர் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனவே எனது கணவரின் நிலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது கணவருக்கு தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரரின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
- கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பதோ செய்யக்கூடாது.
- கோவில்களில் ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது
மதுரை:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழாவில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க கூடாது என்றும், கோவில் வழிபாட்டில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரியும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பதோ செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மேலும், கோவில்களில் ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.