செய்திகள்
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயிகளை படத்தில் காணலாம்.

கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசு கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

Published On 2020-08-04 14:41 GMT   |   Update On 2020-08-04 14:41 GMT
கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை:

கொரோனா தொற்று காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது மனுக்களை அங்குள்ள பெட்டியில் போட்டு விட்டு செல்கின்றனர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு.பழனிசாமி மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக மக்களின் மூலதனத்துடன் தனியாக துணை விதிகள் உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் நகர்ப்புற வங்கிகளை கையகப்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாநில அரசின் நிதி ஆதாரத்தை அபகரிக்கும் அறிவிப்பாகும். மேலும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் துணை விதிகளுக்கு எதிரானது. விவசாயிகளின் மூலதனம் மற்றும் பங்குகள், எவ்வித அறிவிப்பும் கருத்து கேட்பும் இன்றி மத்திய அரசால் அபகரிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே கூட்டுறவு வங்கிகளை கையகப்படுத்தும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

அத்தியாவசியப்பொருட்கள் அவசர சட்ட திருத்தம்-2020, வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல் அவசர சட்டம், வேளாண சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சாதமாக உள்ளது. மேலும் இந்த சட்டங்கள் பெரு நிறுவனங்கள் விவசாய பொருட்களை பதுக்கவும், அதிக விலைக்கு விற்பனை செய்யவும் வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் ராதிகா, ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் அளித்த மனுவில், மகளிர் சுய உதவி குழுவினர் மத்திய,மாநில அரசு திட்டங்களின் கீழ் வங்கிகள், சிறு நுண் கடன் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக தாங்கள் நடத்தி வரும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் நுண் கடன் நிதி நிறுவனங்களில் பெற்றக்கடனை திரும்ப செலுத்த கோரி ஆட்கள் வந்து மிரட்டுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் இருந்தது.

சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா, விவேகானந்தன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், தனியார் கட்டிட சுவர்கள், சாலைகளில் சிலர் வேல் படம் வரைந்து வருகின்றனர். இதனால் மதநல்லிணக்கம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News