செய்திகள்
பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்த அதிகாரிகள்

பாலம் கட்டும் பணியை அதிகாரிகள் ஆய்வு

Published On 2020-07-05 15:12 GMT   |   Update On 2020-07-05 15:12 GMT
கரூர் மாவட்டம், தளவாபாளையம்-கிழக்கு தவுட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பாலம் கட்டும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நொய்யல்:

கரூர் மாவட்டம், தளவாபாளையம்-கிழக்கு தவுட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பஜனைமடத்தெரு அருகில் புகளூர் மேட்டு வாய்க்காலின் குறுக்கே இருந்த பாலம் பழுதடைந்து, எந்த நேரத்திலும் விழும் நிலையில் இருந்தது. இதனால் அந்த பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்டித்தருமாறு மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் பழைய பாலத்தை அகற்றிவிட்டு, ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில், புதிய பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் கோபிநாத் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் பாலம் கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்களிடம், தளவாபாளையம் பகுதியில் இருந்து கிழக்கு தவுட்டுப்பாளையம் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் மட்டுமே செல்லக்கூடிய அளவில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைக்கு கூட இந்த வழியாக கார் மற்றும் வேன் மூலம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாலம் கட்டும் பணியினை விரைந்து முடித்து போக்குவரத்துக்கு விடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News