செய்திகள்
தேனியில் தெரிந்த சூரியகிரகண காட்சிகளை படத்தில் காணலாம்.

தேனியில் சூரிய கிரகணத்தை கண்டு ரசித்த பொதுமக்கள்

Published On 2020-06-22 08:48 GMT   |   Update On 2020-06-22 08:48 GMT
தேனியில் நிகழ்ந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் சூரிய ஒளிக்கண்ணாடி அணிந்து ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
தேனி:

அமாவாசை நாளில் பூமி, சூரியன், நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது வானில் ஏற்படும் நிகழ்வே சூரியகிரகணம். இந்த அரிய நிகழ்வு நேற்று நிகழ்ந்தது. மேலும் இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணமாகவும் இது அமைந்தது. தமிழகத்தில் காலை 10.22 முதல் மதியம் 1.41 மணி வரை சூரியகிரகணத்தை பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். அதன்படி பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சூரியகிரகண நிகழ்வை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை சூரியகிரகணத்தை தெளிவாக பார்க்க முடிந்தது. தேனியில் சூரியகிரகணம் தொடங்கிய நேரத்தில் மேகமூட்டமாக காணப்பட்டது. சிறிது நேரத்தில் மேகங்கள் விலகி சூரிய கிரகணத்தை மக்கள் ரசிக்க வாய்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி எக்ஸ்-ரே தாள்களை கொண்டும், சூரிய ஒளிக்கண்ணாடி அணிந்தும் கண்டு ரசித்தனர். மேலும், வெல்டிங் கடைகளில் கண்கள் கூசாமல் இருக்க பயன்படுத்தும் கண்ணாடியின் வழியாகவும் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

சூரியகிரகணம் ஏற்படும் போது உரலில் உலக்கையை நிறுத்தினால் அது பிடி எதுவும் இன்றி செங்குத்தாக நிற்கும். இதனால், தேனி அல்லிநகரம், அன்னஞ்சி உள்பட பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் உலக்கையை நிறுத்தினர். இதை குழந்தைகள் வியப்புடன் பார்த்தனர். உலக்கையுடன் சிறுவர், சிறுமிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

கோவில்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே மூடப்பட்டு உள்ளன. அங்கு அன்றாட பூஜைக்காக மட்டும் நடை திறக்கப்பட்டு வருகிறது. சூரிய கிரகணம் என்பதால் மாவட்டத்தில் உள்ள கோவில்களின் நடை அடைக்கப்பட்டன.

இதுதவிர சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அங்கு சூரிய ஒளிக்கண்ணாடி மூலம் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்த்தனர். கிரகணம் தோன்றுவது குறித்து அறிவியல் விளக்கங்களும் அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News