செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2020-06-13 09:14 GMT   |   Update On 2020-06-13 09:14 GMT
கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தினமும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கி வருகிறார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச முக கவசம் வழங்கப்பட உள்ளது. கொரோனாவால் ஒரு உயிரையும் இழக்காத வகையில், அரசு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் மட்டுமே பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வெளியில் சென்று வர வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27 பேரில் 26 பேர் குணமடைந்து இருந்தனர். பின்னர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களால் தொற்று பரவியது. தொடர்ந்து மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் சுமார் 200 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது.

வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் வருகிறவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கட்டாயம் தகவல் தெரிவித்து வர வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடற்படை கப்பல்களில் வந்தவர்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடையும் நிலையில் உள்ளனர்.

தொடர்ந்து வருகிற 21-ந்தேதி ஈரானில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் கடற்படை கப்பலில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கு மேற்பட்ட மீனவர்களும் வருகின்றனர். அவர்களுக்கும் வழக்கம்போல் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Tags:    

Similar News