செய்திகள்
ஆதார் அட்டை

நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் செல்ல ஆதார் கார்டு கட்டாயம்

Published On 2020-06-03 07:29 GMT   |   Update On 2020-06-03 07:42 GMT
நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ்களில் பயணிககளுக்கு ஆதார்கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டத்தில் ‘கொரோனா’ ஊரடங்கிற்கு பிறகு தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. முதல் நாளான நேற்றுமுன்தினம் பஸ்களில் பயணம் செய்ய பயணிகள் அதிக அளவில் வரவில்லை.

நேற்று அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகரித்தது. நெல்லையில் இருந்து நாகர்கோவில், பாபநாசம், தென்காசி செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகரித்தது. இதனால் அந்த பஸ்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாமல் இருந்தது.

இதனால் இன்று இந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. நாகர்கோவிலுக்கு மட்டும் காலையில் 10 பஸ்கள் இயக்கப்பட்டன.

இதனால் பஸ்களில் சமூக விலகலை கடைபிடித்து 60 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றினர்.

இந்தநிலையில் நெல்லையில் இருந்து இன்று நாகர்கோவில் சென்ற பஸ்களில் ஆதார்கார்டு உள்ள பயணிகளை மட்டுமே ஏற்றினார்கள். பயணிகளிடம், ‘கண்டிப்பாக ஆதார்கார்டு, அல்லது ஆதார்கார்டு ஜெராக்ஸ் காட்டவேண்டும் அப்பொழுதான் ஏற்றிச் செல்லப்படுவீர்கள்’ என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

நேற்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் சென்ற பயணிகளை ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நிறுத்தி பயணிகளின் பெயர், விபரங்களை சேகரித்தனர். தேவையில்லாமல் செல்பவர்களை அப்பகுதியில் உள்ள கல்லூரிக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை நடத்தினர். இதனால் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்ததால் ஆவேசமடைந்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் தான் இன்று நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ்களில் பயணிககளுக்கு ஆதார்கார்டு கட்டாய மாக்கப்பட்டுள்ளது. பஸ்நுழைவு வாசலில் கண்டக்டர் நின்று ஆதார் கார்டை சரிபார்த்து, என்ன காரணத்திற்காக செல்கிறீர்கள் என்று விசாரணை நடத்தி அதன் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லையில் இருந்து வேலைக்காக நாகர்கோவில் செல்பவர்களுக்கு ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் எவ்வித பரிசோதனையும் செய்யப்படவில்லை. ஆனால் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு ‘கொரோனா’ பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனால் ஆதார்கார்டு கேட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திடீரென பஸ் பயணத்திற்கு ஆதார் கார்டு கேட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆதார்கார்டு கொண்டு வராத பல பயணிகள் வீடுகளுக்கு திரும்பி சென்று ஆதார் கார்டு எடுத்து வந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று நாகர்கோவில் மட்டுமில்லாமல் பாபநாசம், தென்காசி, தூத்துக்குடி போன்ற முக்கிய நகரங்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாமல் முககவசம் அணிந்து சமூகவிலகலை கடைபிடித்து பயணம் செய்தனர்.

நெல்லை புதிய பஸ் நிலையமான எம்.ஜி.ஆர். பஸ்நிலையத்தில் மொத்த காய்கறி மார்க்கெட்டும் தற்காலிகமாக இயங்கி வந்தது. இதனால் நேற்று லாரிகளும் ஒரே நேரத்தில் பஸ்நிலையத்திற்கு வந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் இன்று லாரிகள் அனைத்தும் பஸ்நிலையத்தின் மேற்கு பகுதியிலும், முன் பகுதியிலும் நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசலும் குறைந்தது.

பஸ்நிலைய பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News