செய்திகள்
குழந்தை கோப்புப்படம்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே மாதத்தில் 837 பிரசவம் பார்த்து சாதனை

Published On 2020-06-02 08:41 GMT   |   Update On 2020-06-02 08:41 GMT
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே மாதத்தில் 837 பெண்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்த நிலையில், கொரோனா பாதித்த 6 கர்ப்பிணிகளுக்கும் குழந்தை பிறந்தது
நெல்லை:

பாளை ஐகிரவுண்டில் உள்ள நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக நவீன கட்டிடம் கட்டப்பட்டு தினசரி சுமார் 20 பிரசவங்கள் வரை நடைபெற்று வந்தது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து கடினமான மருத்துவ சிகிச்சைகளுக்கும் நோயாளிகளை இங்கு அனுப்புவது வழக்கம். சராசரியாக ஒரு மாதத்திற்கு 600-ல் இருந்து 700 வரை பிரசவம் நடைபெறும். ஒரு நாளைக்கு சராசரி 20 பெண்களுக்கே இதுவரை பிரசவம் நடந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று நோயினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மகப்பேறு ஆஸ்பத்திரிகளில் பிரசவம் பார்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவம் பார்க்க வரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கு ஏற்ப படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்டது. கூடுதல் டாக்டர்கள் நியமித்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வந்தார்கள்.

இதன் காரணமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மே மாதம் 837 பெண்களுக்கு பிரசவம் நடந்து, அழகான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இதில் 354 பெண்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்துள்ளது. 483 பெண்களுக்கு சுகப்பிரசவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்படி சராசரியாக ஒரு நாளைக்கு 25 பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மே மாத்தில் 2-வது வாரத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 34 பெண்களுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இது நெல்லை அரசு ஆஸ்பத்திரியின் இதுவரை இல்லாத சாதனையாகும்.

6 பெண்கள் கொரோனா நோயுடன் பிரசவம் பார்க்க இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தனிமை வார்டு ஏற்படுத்தப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டது. அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6 பெண்களும் பூரண குணமடைந்து தங்கள் குழந்தைகளுடன் வீடு திரும்பியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன், துணைமுதல்வர் டாக்டர் சாந்தாராம், உறைவிட மருத்துவ அதிகாரி ஷியாம் ஆகியோர் மகப்பேறு மருத்துவர்களை பாராட்டினர்.

Tags:    

Similar News