செய்திகள்
முககவசம்

சென்னையில் முக கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்...?

Published On 2020-05-28 07:08 GMT   |   Update On 2020-05-28 07:08 GMT
போலீசாரின் அபராத வசூலுக்கு பயந்து சென்னையில் முக கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சென்னை:

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பலர் இன்னும் முககவசம் அணியாமல் அலட்சியமாகவே உள்ளனர்.

இதையடுத்து சென்னை போலீசார் கடந்த 22-ந் தேதி முதல் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வெளியில் செல்பவர்களை தடுத்து நிறுத்தி முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

போக்குவரத்து போலீசார் இதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். 2 நாட்களில் 10 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கடந்த 24-ந்தேதி தெரிவித்திருந்தார்.



இந்த நிலையில் போலீசாரின் அபராத வசூலுக்கு பயந்து வெளியில் வரும் பொதுமக்கள் பலர் முக கவசங்களை அணியத் தொடங்கியுள்ளனர். ஒரு சிலர் தங்களது பைகளில் முக கவசங்களை வைத்துக் கொண்டு போலீசாரை பார்த்ததும் அதனை எடுத்து முகத்தில் அணிந்து கொள்கிறார்கள்.

அதுபோன்றவர்களை போலீசார் எச்சரிக்கை செய்கிறார்கள். போலீசுக்கு பயந்து முககவசம் அணிய வேண்டாம். உங்கள் நலன் கருதி அணியுங்கள் என்றும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

கடந்த 22-ந்தேதி முதல் தொடங்கியுள்ள அபராத வசூல் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. 2 நாட்களில் ரூ.50 லட்சம் வரையில் வசூலாகி இருந்தது. அப்படி கணக்கெடுத்தால் இதுவரை 1½ கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் வசூலாகி இருக்கும் என்று போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான முழுமையான புள்ளி விவரங்களை கணக்கெடுத்து வரும் போலீசார் இன்று அல்லது நாளை அதுபற்றிய விவரங்களை வெளியிட உள்ளனர்.
Tags:    

Similar News