செய்திகள்
விசைப்படகை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்

ஜூன் 1-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் கன்னியாகுமரி மீனவர்கள்

Published On 2020-05-27 14:50 GMT   |   Update On 2020-05-27 14:50 GMT
தடைகாலம் முன்கூட்டியே முடிவடைவதால் ஜூன் 1-ந் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கன்னியாகுமரி மீனவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். அவர்கள் மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி:

மீன்வளத்தை பெருக்குவதற்காக ஆண்டுதோறும் கடலில் குறிப்பிட்ட நாட்களில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படும்.

அந்த வகையில், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதாவது, திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி கடல் வரை உள்ள விசைப்படகு மீனவர்கள் அந்த சமயத்தில் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள்.

அதேபோல், மேற்கு கடற்கரை பகுதியான குளச்சல், கேரளா உள்ளிட்ட இடங்களிலும் மீனவர்கள் ஜூன் 14-ந் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் அவர்களது வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கிழக்கு கடற்கரை பகுதியில் தடைகாலமும் அமலுக்கு வந்தது. இதுபோன்ற சூழ்நிலையால், மீனவர்கள் போதிய வருமானமின்றி தவித்தனர்.

எனவே, மீனவர்களின் நலன்கருதி இந்த வருடம் தடை காலத்தை குறைக்க வேண்டும் என தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று, மீன்பிடி தடைகாலத்தின் நாட்களை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் ஜூன் 14-ந் தேதிக்கு பதில் மே 31-ந் தேதியே முடித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மீன்பிடி தடைகாலத்தின் நாட்கள் 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைந்துள்ளது.

இதனால் தமிழகம் உள்பட கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஜூன் 1-ந் தேதி முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லலாம். அதன்படி, குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் ஆயத்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் 4 நாட்களே உள்ளதால் மீன்பிடி வலைகளை சீரமைத்தல், விசைப்படகுகளில் ஐஸ்கட்டிகள் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மும்முரமாக நடக்கிறது. இதனால் சின்னமுட்டம் துறைமுகம் மீண்டும் களை கட்ட தொடங்க தயாராகி உள்ளது.

Tags:    

Similar News