செய்திகள்
மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

கிருஷ்ணகிரியில் சூறைக்காற்றுடன் கனமழை- மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன

Published On 2020-05-18 12:48 GMT   |   Update On 2020-05-18 12:48 GMT
கிருஷ்ணகிரியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததால், நகரமே இருளில் மூழ்கியது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. 100 டிகிரிக்கும் மேலாக வெயில் அடித்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இதனால் சாலையோரங்களில் இளநீர், நுங்கு போன்றவை விற்பனை அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 5 மணி அளவில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. பலத்த சூறைக்காற்றுடன் பெய்த இந்த கனமழையால் கிருஷ்ணகிரி நகரில் கே தியேட்டர் சாலை, எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் என நகரில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன.

அதேபோல சாலையோரம் இருந்த ஏராளமான மரங்களும் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தன. மேலும் சாலையில் பல இடங்களில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நகர் முழுவதும் மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து மழை மாலை 6 மணி வரை நீடித்தது. இந்த மழையால் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த தள்ளு வண்டிகள் ரோட்டிற்கு வந்தன. பல இடங்களில் சூறைக்காற்றுக்கு கூரைகள் பறந்து ரோட்டில் விழுந்து கிடந்தன.

மேலும் பேனர்கள், இரும்பு கம்பிகள், போலீஸ் தடுப்பு கம்பிகள் ஆகியவை சாலை முழுவதும் ஆங்காங்கே கிடந்தன. மாலை 6 மணி அளவில் மழை விட்டதும் மின்வாரிய ஊழியர்கள் ஆங்காங்கே சென்று மீட்பு பணிகளை தொடங்கினார்கள். கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலை, சென்னை சாலை, எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் சேலம் சாலை, ராயக்கோட்டை சாலை என நகரில் எந்த பகுதியில் பார்த்தாலும் சாலையில் மரங்களாக கிடந்தன. மேலும் மின்சார வயர்களை ஆங்காங்கே அறுந்து கிடந்த மின் கம்பிகளும் ரோட்டில் கிடந்தன.

இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இரவு விடிய, விடிய கிருஷ்ணகிரி நகர் முழுவதும் சாலையில் கிடந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றும் பணிகள் நடந்தன. இதனால் கிருஷ்ணகிரி நகரமே நேற்று இரவு இருளில் மூழ்கியது.

இதேபோன்று தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, இண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது சாலையோரம் இருந்த மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. இதன் காரணமாக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 
Tags:    

Similar News