செய்திகள்
கத்திகுத்து

கோவையில் வெவ்வேறு சம்பவம்- 3 வாலிபர்களுக்கு கத்திகுத்து

Published On 2020-05-17 15:52 GMT   |   Update On 2020-05-17 15:52 GMT
கோவையில் வெவ்வேறு சம்பவத்தில் 3 வாலிபர்களுக்கு கத்திகுத்து விழுந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

பொள்ளாச்சி கோட்டூர் மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (39). இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சூர்யா (26). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் தலகண்டசாமி என்பவருடன் கடந்த சில வருடங்களாக பேசி வந்தார்.

அது கதிர்வேலுக்கு பிடிக்காததால் தனது மனைவியிடம் அதை கூறினார். பின்னர் சூர்யா அவரிடம் பேசுவதை நிறுத்தினார். ஆனால் தலகண்டசாமி போன் மூலம் தொடர்ச்சியாக அழைத்து சூர்யாவை தொந்தரவு செய்து வந்தார். இதனால் கோபமடைந்த கதிர்வேல் அவரது வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு தலகண்டசாமி இல்லை.

அதனால் அவரது மனைவியை திட்டி விட்டு வீடு திரும்பினார். இதையறிந்த தலகண்டசாமி ஆத்திரமடைந்து அங்கு வந்து கதிர்வேலை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார். அப்போது தலகண்டசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கதிர்வேலை குத்தினார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து சூர்யா கோட்டூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் ராஜ்குமார் (42). மற்றும் மகேந்திரன் (40). இவர்கள் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இவர்களுக்கிடையே வாடகைக்கு ஆட்டோ ஓட்டுவதில் முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தறு இதுகுறித்து ராஜ்குமார் மற்றும் மகேந்திரனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொன்டனர். அப்போது ஆத்திரமடைந்த மகேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜ்குமாரை குத்தினார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ராஜ்குமாரின் நண்பர் பிரகாஷ் அவரை தடுத்தார். அப்போது மகேந்திரன் அவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து ராஜ்குமாரின் மனைவி சுதா ஆலாந்துறை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News