செய்திகள்
ஜிகே வாசன்

மத்திய அரசின் அறிவிப்பு பொருளாதாரத்தை மீட்க உதவும் - ஜி.கே.வாசன் நம்பிக்கை

Published On 2020-05-14 09:33 GMT   |   Update On 2020-05-14 09:33 GMT
மத்திய அரசின் அறிவிப்பு பொருளாதாரத்தை பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க பேருதவியாக இருக்கும் என ஜிகே வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டிருக்கும் பல்வேறு அறிவிப்புகள் வரவேற்புக்குரியது.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி கடன் உதவி பிணையில்லாமல் வழங்கவும், கடனை 4 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் போது முதல் ஆண்டில் தவணை வசூல் செய்யப்படாது என்பதும், நலிவடைந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதும், வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி செய்ய ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்குவதும் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க பேருதவியாக இருக்கும்.

இப்படி சிறு குறு நடுத்தர தொழிலுக்கு நிதி ஒதுக்குவதால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும், தொழில் செய்பவர்களும் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கும், தொழில் நடத்துவதற்கும் பலன் தரும்.

கடந்த 3 மாதங்களுக்கு பி.எப் தொகையை மத்திய அரசே செலுத்தும் என்று தெரிவித்த வேளையில் இப்போது அடுத்த 3 மாதங்களுக்கும் பி.எப் தொகையை அரசே செலுத்தும் என்பதால் சுமார் 3.67 லட்சம் நிறுவனங்கள் பயன் பெறும். சுகாதார ஊழியர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கவும், மின்சார விநியோக நிறுவனங்களுக்கு ரூ. 90 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கவும், கட்டுமானப்பணிகளுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கவும், வருமான வரி தாக்கல் செய்ய 4 மாத காலக்கெடு விதித்து, டி.டி.எஸ். வரி விதிப்பில் 25 சதவீத குறைப்பு செய்யவும் அறிவிப்புகள் வெளியாகியிருப்பது பலதரபட்ட மக்களுக்கு பயன் தரும்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், பொருளாதாரத்தையும் படிப்படியாக மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News