செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

கொரோனா பாதிப்பு இல்லாத மாநகரமாக சென்னையை மாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2020-04-30 03:18 GMT   |   Update On 2020-04-30 03:18 GMT
மக்களிடம் அச்சம் ஏற்படாமல் தடுத்து கொரோனா பாதிப்பு இல்லாத மாநகரமாக சென்னையை மாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் அதிக எண்ணிக்கையில் நோய்த்தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதற்கு கொரோனா ஆய்வுகளின் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கு, 3,300 என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டிருப்பதும் காரணம் ஆகும். இந்த எண்ணிக்கையை முதலில் இரு மடங்காகவும், அடுத்த சில நாட்களில் மூன்று மடங்காகவும் அதிகரித்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் கண்டு சிகிச்சைஅளிக்க வேண்டும்.

நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதனால் மக்களிடம் அச்சம் ஏற்படாமல் தடுக்க அதற்கான காரணங்களை அரசு விளக்க வேண்டும். சென்னையில் நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

எந்த தேவைக்காகவும் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை நிலையங்களை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையிலும் மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இயல்பு நிலையை ஏற்படுத்த முடியும்.

எனவே, வீடு, வீடாக ஆய்வு, அதிக எண்ணிக்கையிலான சோதனைகள், சமூக இடைவெளியை பராமரித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் சென்னையை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநகரமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News