செய்திகள்
கொரோனா வைரஸ்

கரூரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 17 ஆக உயர்வு

Published On 2020-04-03 09:37 GMT   |   Update On 2020-04-03 09:37 GMT
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 17 பேர்களில் 16 பேருக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரூர்:

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை முதலில் டெல்லியில் நடந்த ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த குளித்தலையை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளருக்கு கொரோனா பாதிப்பு முதலில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருடன் சேர்ந்து மாநாட்டிற்கு சென்று வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த 29 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி, திருச்சி அரசு ஆஸ்பத்திரி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

பின்னர் இவர்களில் தோகைமலை வேதாசலபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மேலும் பள்ளப்பட்டியை சேர்ந்த 5 பேர், காந்தி கிராமத்தை சேர்ந்த 2 பேர், குருணி குளத்துப்பட்டி, கடவூர் மைலம்பட்டி, பசுபதிபாளையம், புலியூர், கரூர், கரூர் பெரிய பள்ளிவாசல் மற்றும் புகளூர் தாலுகா முருகம்பாளையம், நாமக்கல்லை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகள் உள்ள பள்ளப்பட்டி, பசுபதிபாளையம், புலியூர், காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகளின் வீதிகள் அடைக்கப்பட்டு சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகாரிகள், போலீசார் அங்கு நியமிக்கப்பட்டு அந்த வீதிகளில் உள்ளவர்கள் வெளியே செல்லாத வகையிலும், வெளிநபர்கள் அங்கு வராத வகையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான பொருட்கள் போன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு வாங்கி கொடுக்கப்படுகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50 வீடுகளுக்கு ஒரு அதிகாரி என கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக கரூர் மருத்துவ கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலாவிடம் இன்று கேட்டபோது, கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 17 பேர்களில் 16 பேருக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தோகமலையை சேர்ந்த ஒருவர் மட்டும் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே கொரோனா பரிசோதனைக்கு அனுப்பிய 5 பேரின் ரிசல்ட் இன்னும் வரவில்லை. அது மட்டுமல்லாமல் புதிதாக 9 பேரின் ரத்த மாதிரி சேலத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் இன்று மதியத்திற்கு மேல் வரும் என்றார்.

Tags:    

Similar News