செய்திகள்
கர்நாடக எல்லையில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை படத்தில் காணலாம்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியை சேர்ந்த 230 பேர் கர்நாடக எல்லையில் தவிப்பு

Published On 2020-04-02 10:59 GMT   |   Update On 2020-04-02 10:59 GMT
சொந்த ஊருக்கு நடந்தே வர முயற்சி செய்த நெல்லை, தென்காசி, தூத்துக்குடியை சேர்ந்த 230 பேர் கர்நாடக எல்லையில் தவித்து வருகின்றனர்.

ஆலங்குளம்:

மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் கூலிவேலை செய்து வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1000 இளைஞர்கள் மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் வேலை செய்து வருகின்றனர்.

144 தடை உத்தரவு பிற‌பிக்கப்பட்டதையடுத்து அவர்களை குடியிருப்புகளின் உரிமையாளர்கள் காலி செய்ய நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் உணவு மற்றும் தங்குமிடமின்றி செய்வதறியாது திகைத்தனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு வர முடிவு செய்தனர். ஆனால் ஊரடங்கு காரணமாக அனைத்துவித போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 230-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு நடந்தே செல்வது என முடிவு செய்தனர்.

அதன்படி சோலாப்பூர் அருகில் உள்ள சில கிராமங்களில் இருந்து நடக்கத்தொடங்கிய அவர்கள், மராட்டியம் -கர்நாடக மாநில எல்லைப்பகுதியான சோலாப்பூர் சோதனைச்சாவடி பகுதிக்கு வந்தனர். அவர்களை சோதனைச் சாவடியில் இருந்தவர்கள் தடுத்துநிறுத்தினர்.

பின்பு அவர்களை நடந்து செல்ல அனுமதி மறுத்ததோடு, அங்குள்ள போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்திற்கு சொந்தமான கிட்டங்கியில் தங்க ‌வைத்தனர். அங்கு தங்கியிருக்கும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தங்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துச்செல்ல தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அங்கு தங்கியிருக்கும் ஆலங்குளம் வாலிபர் கூறுகையில், 2 நாட்களாக இரு வேளை உணவுடன் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளோம். 14‍-ந் தேதி வரை இங்கு தான் இருக்க வேண்டும் என இங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே தமிழக அரசு எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News