செய்திகள்
கமல்ஹாசன்

தந்தையின் கோரிக்கையை நிராகரித்த ஆம்புலன்ஸ் டிரைவர் - கமல்ஹாசன் பாராட்டு

Published On 2020-03-29 20:12 GMT   |   Update On 2020-03-29 20:12 GMT
கொரோனா பீதியால் வேலையை விட்டுவிட்டு வரச்சொன்ன தந்தையின் கோரிக்கையை ஆம்புலன்ஸ் டிரைவர் நிராகரித்தார். இதுதொடர்பான ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை:

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நபர்களை ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்வதற்கான பணியில் மூன்று 108 ஆம்புலன்சுகள் பிரத்யேகமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பாண்டித்துரை (26) எனும் இளைஞர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார்.

இந்தநிலையில் வேலையைவிட்டு வருமாறு பாண்டித்துரையிடம் அவரது தந்தை உருக்கமாக பேசுவதும், அதற்கு ‘சமூக நலனே முக்கியம் நான் வேலையை விட்டு வரமாட்டேன்’, என பாண்டித்துரை பதிலளிப்பதுமான ஆடியோ பதிவு தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன் விவரம் வருமாறு:-

‘இந்த வேலை வேணாம் பா’

தந்தை: யப்பா... ஆம்புலன்சுல கொரோனா நோய் தாக்கியவங் கள, காய்ச்சலோடு வர்றவங்கள நீ தொட்டு தூக்குறியாப்பா...

பாண்டித்துரை: நான் தொட மாட்டேன்பா. மாஸ்க், கிளவுஸ் போட்டிருக்கேன். எனக்கு எதுவும் ஆகாதுப்பா... நீ தேவையில்லாம பயப்படாதப்பா...

தந்தை: நான் சொல்றதை கேளு... பிச்சை எடுத்தாவது நான் உன்னை காப்பாத்துறேன். இந்த வேலை உனக்கு வேணாம்பா... நீ மெட்ராஸ்ல இருக்குற நம்ம சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிடு. யார்கிட்டயும் சொல்லிடாம போயிடு... போலீஸ் வந்து எங்ககிட்ட கேட்டா கூட, என் பையன் எங்க போனான்னு தெரியாதுனு சொல்லிடுறேன்பா.... இந்த வேலையே வேணாம்பா...

பாண்டித்துரை: எல்லாரும் இப்படி நினைச்சாங்கண்ணா யாருதான் இந்த வேலைய பார்க்கிறது? யாருதான் இவங்கள காப்பாத்துவா?

தந்தை: ஏலேய்... ஊரைப் பார்க்க ஆயிரம் இருக்காண்டா... எனக்கு நீ வேணும்டா... அவனவன் காரியமா பொழச்சுட்டு இருக்கான்டா... உனக்கு யாரோ அவார்டு தர போறது கிடையாது... உனக்கு இது வேணாம்டா... அப்பா சொல்றதைக் கேளு..

பாண்டித்துரை: இல்லப்பா இப்போ இருக்கிற சூழ்நிலையில சமூக நலன் தான் முக்கியம்... உங்க பையன ராணுவத்துக்கு சேர்த்து விட்டதாக நினைச்சுக்கோங்க... நான் இந்த வேலையை விட்டு வர மாட்டேன் பா... வச்சுடுறேன்.

இவ்வாறு அந்த உரையாடலில் உள்ளது.

இந்த ஆடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. டிரைவர் பாண்டித்துரைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரை கூறுகையில், “இந்த வேலையை நேசித்து தான் செய்கிறேன். எனக்கு எந்த வருத்தமும், பயமும் கிடையாது. எனது ஒரு வேண்டுகோள் என்னவென்றால் உயிரைக்கொடுத்து வேலை செய்யும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு நிரந்தர பணி நியமனம் வேண்டும். அதை அரசு செய்து தந்தால் போதும். மற்றபடி எதுவும் எனக்குத் தேவையில்லை” என்றார்.

பாண்டித்துரைக்கு நன்றி தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

108 ஓட்டுனர் பாண்டித்துரை நீங்கள் என் நம்பிக்கையின் நாயகன். இவர் போன்ற தன்னலம் பாராது நாட்டிற்காக முன்னிற்கும் வீரர்கள் தான் நம் தேசத்தை இயக்குபவர்கள். பாசத்தில் கதறும் அவரின் பெற்றோரின் குரல், உள்ளத்தை உலுக்கும் போதும் நாடு என்னவாகும்? என்று கேட்கும் அந்த மனம் தான் கடவுள். கட உள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News