செய்திகள்
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி மாவட்டத்தில் 4,120 பேர் வீட்டுத்தனிமையில் கண்காணிப்பு - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

Published On 2020-03-28 10:13 GMT   |   Update On 2020-03-28 10:13 GMT
வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 4,120 பேர் வீட்டுத்தனிமையில் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
திருச்சி:

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், பரமேஸ்வரி, குடும்ப நலத்துறை இணை இயக்குனர் கோபிநாத், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் சுப்ரமணியன், கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் வனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் உள்பட அதிகாரிகள் அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர். 3 அடி இடைவெளி விட்டு போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தே அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருச்சி நகரம் மற்றும் சில பகுதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து கொரோனா வைரஸ் தொடர்பாக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பார்வையிட்டேன். கொரோனா வைரஸ் தொடர்பாக புகார் செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மையத்திற்கு பொதுமக்களிடம் இருந்து வந்த 195 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

மார்ச் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை பல்வேறு நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு 24 ஆயிரம் பேர் வந்து உள்ளனர். இவர்களில் 4,120 பேர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் 2,622 பேரின் வீடுகளில் இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 1,498 பேரின் வீடுகளிலும் இன்று (நேற்று) மாலைக்குள் ஸ்டிக்கர் ஒட்டும் பணி முடிவடைந்து விடும். வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை சுகாதார துறை பணியாளர்கள் 28 நாட்கள் கண்காணிப்பார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் அவர்களது பாஸ்போர்ட்டுகள் மாவட்ட நிர்வாகத்தால் முடக்கப்படும். அதேபோல் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் ரத்த மாதிரிகளையும் அவர்களது வீட்டுக்கே சென்று சுகாதார துறை பணியாளர்கள் சேகரித்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News