செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளம் கொடுக்க முடிவு: முதல்-அமைச்சருக்கு என்.ஜி.ஓ. சங்கம் கடிதம்

Published On 2020-03-23 09:49 GMT   |   Update On 2020-03-23 09:49 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் முடக்கப்படும் கூலித்தொழிலாளர்கள், ஏழை-எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஒரு நாள் சம்பளத்தை வழங்க என்.ஜி.ஓ. சங்கம் முடிவு செய்துள்ளது.
சென்னை:

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் (என்.ஜி.ஓ) மாநில தலைவர் இரா.சண்முகராஜன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் தலைமையில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நல்ல நடவடிக்கைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்-ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்கிடுவார்கள். மேலும் பொதுமக்களை இந்த நோயில் இருந்து காப்பாற்ற அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி, நகராட்சி, காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை உள்ளிட்ட துறை பணியாளர்கள் மிகுந்த அக்கறையோடு பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த கடினமான சூழ்நிலையில் கொரோனா நோய் தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அமைப்பு சாரா பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் மற்றும் ஏழை-எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்-ஆசிரியர்களது ஒருநாள் ஊதியத்தினை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட இசைவு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு நாள் ஊதியத்தினை இந்த மாதம் (மார்ச்) சம்பளத்தில் பிடித்து கொள்வதற்கான அரசாணை பிறப்பித்து உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News