செய்திகள்
அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்

வையம்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்

Published On 2020-03-15 17:18 GMT   |   Update On 2020-03-15 17:18 GMT
வையம்பட்டி அருகே அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வையம்பட்டி:

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியப்பகுதி, தவள வீரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வீரமலைப்பட்டி பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் விளையாட்டு மைதானம் இல்லை. இந்நிலையில் சாலையோரத்தில் சுமார் 2½ ஏக்கரில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை மைதானமாக ஊராட்சி சார்பில் மாற்றித்தந்திட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பதற்கான பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த பொதுமக்கள் இது பற்றி அதிகாரிகளுக்கு மீண்டும் தகவல் கொடுத்தனர். வருவாய்த்துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டதை தொடர்ந்து, அந்த இடத்தில் எந்தவித ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இருப்பினும் நேற்று காலை சிலர், அரசுக்கு சொந்தமான அந்த இடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த கிராம மக்கள் வீரமலைப்பட்டியில், அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு பஸ்சை விடுவித்த பின்னர் பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று பொதுமக்கள் கூறியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வையம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டமும் நடைபெற உள்ளதாக தெரிகிறது. அதிகாரிகள் கூறியும் கூட அதையும் மீறி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது வருவாய்த்துறையும், போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News