செய்திகள்
மணல்

மணல் கடத்தலுக்கு உடந்தை- போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு

Published On 2020-03-12 06:47 GMT   |   Update On 2020-03-12 06:47 GMT
நாங்குநேரி அருகே மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த போலீஸ் ஏட்டு மீது மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் ஆற்று மணல் அள்ள இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் சிலர் நள்ளிரவு நேரங்களில் டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில் மணல் கடத்தி வருகிறார்கள். சிலர் வெளியில் இருந்து ஆற்று மணல் வாங்கி வருவது போலி ரசீது மூலம் நெல்லை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறு மற்றும் கால்வாய்களிலும் மணல் அள்ளி கடத்தி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் மணல் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே பல கொலைகள், மோதல்கள் நடந்துள்ளன. நாங்குநேரி அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் ஏட்டு ஒருவரும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மூலைக்கரைப்பட்டி அருகே தெய்வநாயக பேரியில் உள்ள கால்வாயில் இருந்து ஆற்று மணல் இரவு நேரங்களில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் மூலைக்கரைபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் தெய்வ நாயகப்பேரி மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர்.

அப்போது ஒரு டிராக்டரில் ஆற்று மணல் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். அப்போது டிராக்டரில் அனுமதி இல்லாமல் ஆற்று மணலை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் டிராக்டரையும் மணலையும் பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்திய நெடுங்குளத்தை சேர்ந்த அய்யப்பன் (34), இடையன்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (64) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அய்யப்பனின் உடன் பிறந்த அண்ணன் அருணாசலம் (42), நெல்லை மாநகர மதுவிலக்கு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார் என்றும் அவரது ஏற்பாட்டில் மணல் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த போலீஸ் ஏட்டு அருணாசலம் மீதும் மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர மதுவிலக்கு பிரிவில் பணியாற்றிய போலீஸ் ஏட்டு அருணாசலம் தலைமறைவானார். அவரை மூலைக்கரைப்பட்டி போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.




Tags:    

Similar News