செய்திகள்
கோப்பு படம்

கோவில் சிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சருக்கு இந்து முன்னணி கோரிக்கை

Published On 2020-02-28 14:21 GMT   |   Update On 2020-02-28 14:21 GMT
கோவில் புராதான சிலைகள், சொத்துகளை பாதுகாப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர்:

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமானதாக, ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளரும், டி.ஜி.பி.யும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு இந்து கோவில்களின் நிர்வாகத்தில் மிகுந்த மெத்தனமாக நடந்து கொள்கிறது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை நேர்மையாக விசாரித்த போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்காமல் இருப்பதற்கு காட்டப்பட்ட அவசரம், தற்போது அந்த வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு அரசு காட்டவில்லை என்று தோன்றுகிறது.

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமான பின்னணியில் பல முக்கிய பிரமுகர்கள் இருப்பார்கள் என்றும், மிகப்பெரிய மாபியா கும்பலின் சதி உள்ளது என்றும் இந்து முன்னணி கருதுகிறது. எனவே, கோவில் புராதான சிலைகள், சொத்துகளை பாதுகாப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News