செய்திகள்
மதுரை கலெக்டர் அலுவலக சாலையில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை- மதுரையில் திடீர் பரபரப்பு

Published On 2020-02-28 11:29 GMT   |   Update On 2020-02-28 11:29 GMT
மதுரை கலெக்டர் ஆபீசில் போலீசார் நடத்திய வெடி குண்டு சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை:

மதுரை கலெக்டர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக செயல்பட்ட நேரத்தில் போலீசார் மோப்பநாயுடன் வந்ததால் பதட்டம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் வர அங்கு கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு சோதனையை போலீசார் தொடங்கியதால் ஊழியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. “எங்கிருக்கும் வெடிகுண்டு...” என்று மிரண்டனர். ஆனால் சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் பரபரப்பு மட்டும் அடங்க வில்லை.

அதற்கு காரணம், கலெக்டர் அலுவலக சாலை முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டது தான். ராஜா முத்தையா மன்றம் வரை இந்த சோதனை நீடித்தது.

இதனால் வெடிகுண்டு எங்குள்ளது என்ற உண்மை தெரியாமல் மக்களும் திகைப்புக்குள்ளானார்கள். இது பற்றி விசாரித்தபோது மதுரையில் இன்று மாலை நடைபெற உள்ள பா.ஜனதா பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் எதுவும் வரவில்லை என மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகமும் உறுதிப்படுத்தியது. இருப்பினும் மோப்பநாய்... மெட்டல் டிடெக்டர்... போலீசார் அதிரடி சோதனை போன்றவற்றால் மதுரை மாநகரம் சிறிது நேரம் பரபரப்புக்குள்ளானது.

Tags:    

Similar News