செய்திகள்
கோப்பு படம்

தொடர்ந்து குற்றச்செயல்: தாய்-மகன் உள்பட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2020-02-24 09:01 GMT   |   Update On 2020-02-24 09:01 GMT
சென்னையில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த தாய் மகன் உள்பட 8 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட அன்னை சத்யா நகரைச் சேர்ந்த அக்பர்பாட்சா, அவரது தாய் யாஸ்மின் பானு, வியாசர்பாடியைச் சேர்ந்த ஆகாஷ், முகலிவாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்சாண்டர், அகரம் ஜெயபிரகாஷ், ஆர்.கே.நகர் சிவக்குமார், எர்ணாவூர் ராம்கி, நாகராஜ் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த 8 பேரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் அவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு பரிந்துரை செய்தனர்.

அதன்படி தொடர் குற்றத்தில் ஈடுபட்ட யாஸ்மின் பானு, அவரது மகன் அக்பர்பாட்சா உள்பட 8 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இவர்களில் அக்பர் பாட்சா, யாஸ்மின் பானு, ஆகாஷ் ஆகிய 3 பேர் மீது கஞ்சா தொடர்பான வழக்குகள் உள்ளன. ராம்கி, நாகராஜ் ஆகிய 2 பேர் மீதும் கொலை வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளன.

இதில் ராம்கி ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்திலும் நாகராஜ் 2 முறை குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். ஜெயபிரகாஷ், சிவக்குமார் மீது பெட்ரோல் நிலையம் தொடங்குவதற்கான போலி உரிமம் விநியோகித்தது தொடர்பாக வழக்கு உள்ளது.
Tags:    

Similar News