செய்திகள்
ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஈபிஎஸ், ஓபிஎஸ்.

ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தனர் ஈபிஎஸ், ஓபிஎஸ்

Published On 2020-02-24 06:10 GMT   |   Update On 2020-02-24 06:10 GMT
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள ஜெயலலிதா உருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாவின் உருவ சிலை மலர்களால் அலங்கராம் செய்யப்பட்டு இருந்தது.

கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்கள். அமைச்சர்களும் மலர் தூவினார்கள்.

அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். அப்போது தொண்டர்கள் புரட்சித் தலைவி வாழ்க என்று கோ‌ஷம் எழுப்பினார்கள். ஜெயலலிதாவின் சாதனைகளை பறைசாற்றும் புத்தகத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டனர்.

அதன்பிறகு தலைமைக் கழகத்தில் 72 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ‘கேக்’ வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினர்.

அப்போது கூடி நின்ற நிர்வாகிகள் ‘அம்மா வாழ்க’, புரட்சித் தலைவி புகழ் ஓங்குக’ என்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.

அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 109 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், நலிந்தோருக்கான நிதி உதவி 14 பேருக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

அங்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாம் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஏற்பாடு செய்திருந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியையும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், எம்.சி. சம்பத், ஆர்.காமராஜ், கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, மா.பா. பாண்டிய ராஜன், பெஞ்சமின், தலைமை கழக நிர்வாகிகள் பொன்னையன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, தமிழ்மகன் உசேன், தம்பிதுரை, நத்தம் விசுவநாதன், கமலக்கண்ணன், மாவட்ட கழக செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ் விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, வெங்கடேஷ் பாபு, சிட்லபாக்கம் ராஜேந்திரன், அலெக்சாண்டர், வாலாஜா பாத் கணேசன், காஞ்சி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் முத்தியால் பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார், முன்னாள் எம்.எல்.ஏ. புரசை வி.எஸ்.பாபு.

முன்னாள் கவுன்சிலர் சின்னையன், முகப்பேர் இளஞ்செழியன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, காரப்பாக்கம் லியோ என். சுந்தரம், ‘உங்களுக்காக’ டாக்டர் சுனில், மின்சாரம் சத்திய நாராயண மூர்த்தி, மாணவரணி ராமலிங்கம், பானுநகர் முகுந்தன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
Tags:    

Similar News