செய்திகள்
விபத்து

தஞ்சையில் மினிலாரி கவிழ்ந்து 2 பேர் பலி

Published On 2020-02-23 15:45 GMT   |   Update On 2020-02-23 15:45 GMT
தஞ்சையில் ஜல்லிக்கட்டு மாடு ஏற்றி சென்ற மினிலாரி கவிழ்ந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாதா கோட்டையில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த காளைகள் போட்டியில் பங்கேற்றன.

இந்த நிலையில் தஞ்சை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள காத்தாடிப்பட்டியைச் சேர்ந்த சிலர் ஜல்லிகட்டில் கலந்து கொள்வதற்காக காளை மாட்டை கொண்டு சென்றனர். அந்த காளை வாடிவாசலிலிருந்து திறந்து விடப்பட்டபோது களத்தைக் கடந்து திடீரென ஓடியது. அதிர்ச்சியடைந்த காளையின் உரிமையாளரான காத்தாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜராஜசோழன் (வயது 25), வெற்றிச்செல்வன் (17), மதி (35), மாதவன் (17), கல்விராயன்பேட்டையைச் சேர்ந்த துரைராஜ் (20), ஆகியோருடன் காளையை பிடிப்பதற்காக விரட்டி சென்றார். தஞ்சை அருகே பட்டுக்கோட்டை புறவழிச் சாலைப் பகுதியில் காளையை மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து இந்த காளையை மினி லாரியில் ஏற்றி அங்கிருந்து காத்தாடிப்பட்டிக்குப் ராஜராஜசோழன் உள்ளிட்ட 5 பேரும் புறப்பட்டனர். மினிலாரியை மணி என்பவர் ஓட்டி சென்றார்.

விளார் புறவழிச் சாலையில் ஒரு டயர் கம்பெனி அருகே சென்றபோது திடீரென மினிலாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.

இதில், காளை துள்ளி குதித்து சென்று விட்டது. ராஜராஜசோழன், துரைராஜ் உள்ளிட்ட 5 பேரும் மினிலாரியின் இடிபாடுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். டிரைவர் மணி காயமின்றி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலத்தக் காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜராஜசோழன், துரைராஜ் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். வெற்றிசெல்வன், மாதவன், மதி ஆகயோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் மணியை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News