செய்திகள்
நாகர்கோவிலில் மழையில் இருந்து தப்பிக்க குடை பிடித்து செல்லும் மாணவிகள்

குமரி மாவட்டம் முழுவதும் பெய்த திடீர் மழை - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2020-02-22 14:32 GMT   |   Update On 2020-02-22 14:32 GMT
குமரி மாவட்டம் முழுவதும் திடீரென பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

கடந்த ஒரு வாரமாக பகலில் வெயில் கொளுத்தியது. இதனால் ஏற்பட்ட உஷ்ணம் இரவு நேரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள் இரவில் தூங்க முடியாமல் அவதிக்கு ஆளானார்கள்.

குமரி மாவட்டம் முழுவதுமே இதே நிலை காணப்பட்டது. மரங்கள் அடர்ந்த மேற்கு மாவட்டத்திலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

மாவட்டம் முழுவதும் நேற்று பகலிலும் கடுமையான வெயில் வாட்டி எடுத்தது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை காணப்பட்டது. மாலையில் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இரவு வந்த பின்பும் வெப்பத்தின் தாக்கம் இருந்தது.

இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் நாகர்கோவில் பகுதியில் திடீரென மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழை பின்னர் ஓய்ந்தது.

அதன் பிறகு இன்று அதிகாலை 5 மணியளவில் மாவட்டம் முழுவதும் மழை பெய்யத் தொடங்கியது. மார்த்தாண்டம், திருவட்டார், தக்கலை, வில்லுக்குறி, பார்வதிபுரம், நாகர்கோவில், செட்டிக்குளம், சாமித் தோப்பு, சுசீந்திரம், தென்தாமரைகுளம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சில இடங்களில் மழை நீர் பெருக் கெடுத்து ஓடியது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கொட்டியது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கியது. பேச்சிப்பாறை அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 499 கனஅடி தண்ணீர் வரத் தொடங்கியது. அணையில் தற்போது 30.90 அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 598 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதுபோல பெருஞ்சாணி அணைக்கு 85 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 48.5 அடி தண்ணீர் உள்ளது. சிற்றாறு-1 அணைக்கும் இன்று காலை 139 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 11.15 அடி தண்ணீர் உள்ளது.

குமரி மாவட்டம் முழுவதும் இன்றுகாலை 8 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

நாகர்கோவில்-7.6, பூதப் பாண்டி-5.2, கன்னிமார்-7.4, ஆரல்வாய்மொழி-5.8, மயிலாடி-7.2, கொட்டாரம்-5, ஆணைக்கிடங்கு-8.2. குருந்தன்கோடு-4.2, மாம்பழத்துறையாறு-3.
Tags:    

Similar News