செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம்

உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலில் வெற்றியை ஈட்ட பாடுபட வேண்டும்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் அறிக்கை

Published On 2020-02-18 09:33 GMT   |   Update On 2020-02-18 09:33 GMT
உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை ஈட்ட பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக மக்களின் பேரன்பைப் பெற்ற ஒப்பற்ற அரசியல் இயக்கமாகிய அ.தி.மு.க. அரசியல் களத்திலும், தேர்தல் பணிகளிலும் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றியும், மக்களுக்கு இன்னும் எவ்வாறெல்லாம் தொண்டு செய்யலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து, கலந்துரையாடி நம் கடமைகளை திட்டமிட தலைமைக் கழகத்தில் நான்கு நாட்கள் நடைபெற்று முடிந்திருக்கும் ஆலோசனைக் கூட்டங்கள் மிகச் சிறப்பாகவும், பயனுடையதாகவும் அமைந்திருந்தன.

இந்த ஆலோசனைக் கூட் டங்களில் கலந்துகொண்ட கழக நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் சென்றதைக் கண்டு நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம்.

எம்.ஜி.ஆரிடமும், அம்மாவிடமும் அரசியல் பாடம் பயின்ற நாம் அனைவரும் கழகத்தின் உயர்வுக்காகவும், வெற்றிக்காகவும் முழு மூச்சுடன் பணியாற்ற உறுதிபூண்டிருப்பதை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரிடமும் காணமுடிந்தது.

கழகத்தின் அழைப்பை ஏற்று, மாவட்ட ரீதியான ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்ட கழக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வின் பணிகள் குறித்தும், கழக அரசின் செயல்பாடுகள் குறித்தும், கழக நிர்வாகிகள் அனைவரும் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினீர்கள்.

அ.தி.மு.க. தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கும் வகையில் நீங்கள் அனைவரும் தெரிவித்துள்ள கருத்துகளை பரிசீலித்து ஆக்கப்பூர்வமான வகையில் கழகத்தை வழிநடத்திச் செல்வோம் என்று உறுதி கூறுகிறோம்.

ஆலோசனைக் கூட்டத்தில் கழக நிர்வாகிகளில் சிலர் சுட்டிக்காட்டியவாறு ஆங்காங்கே செய்யப்பட வேண்டிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் தீர ஆராய்ந்து விரைவில் செயல்படுத்துவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அம்மாவின் நல்லாசியோடு, கழக ஒருங்கிணைப்பாளர், கழக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பினை ஏற்றுள்ள நாங்கள், உங்கள் ஆலோசனைகளையும், அனுபவங்களையும் பெரிதும் மதிக்கிறோம்.

அ.தி.மு.க.வின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வரும் நீங்கள் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கழகப் பணிகள் குறித்து நாங்கள் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் கழகத்தின் நன்மைக்கும், கழக உடன்பிறப்புகளின் அரசியல் பயணத்திற்கும் பேருதவி செய்யும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

“எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றப் பொதுத்தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் கழகம் முழுமையான வெற்றியை ஈட்டுவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழுமூச்சுடன் மேற்கொண்டு, வெற்றிக்கனியை எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்” என்று நீங்கள் அனைவரும் உறுதி அளித்தமைக்கு, எங்களது மனமார்ந்த நன்றி மீண்டும் உரித்தாகுக.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
Tags:    

Similar News