செய்திகள்
நீரில் மூழ்கி பலி

தச்சம்பட்டு ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

Published On 2020-02-12 10:55 GMT   |   Update On 2020-02-12 10:55 GMT
தச்சம்பட்டு ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டராம்பட்டு:

தச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி இவருக்கு மோகன செல்வி (வயது 14). தமிழ்ச்செல்வன் (10) என்ற மகள், மகன் இருந்தனர்.

தமிழ்ச்செல்வன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற தமிழ்ச்செல்வன் அவரது வீட்டின் அருகில் உள்ள ஏரிக்கு சென்றான். தற்போது சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது.

ஏரியில் தண்ணீர் இருப்பதை கண்டு தமிழ்ச் செல்வன் துணிகளை கழட்டி அருகில் வைத்துவிட்டு குளிக்க சென்றான். அப்போது நீச்சல் தெரியாத தமிழ்செல்வன் ஏரியில் மூழ்கினான். இதனால் மாணவரின் பெற்றோர் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியும் தமிழ்ச்செல்வன் கிடைக்கவில்லை.

இதனையடுத்து நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஏரிக்கு சென்று பார்த்தபோது அருகில் யூனிபார்ம் துணி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏரியில் மூழ்கி இறந்துபோன தமிழ்ச் செல்வன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 5-ந் தேதி சாத்தனூர் அணையிலிருந்து ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது இந்த பகுதியில் 40 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. அந்தவகையில் சில ஏரிகளில் தண்ணீர் இல்லாதபோதும் தற்போது அணையில் இருந்து வந்த தண்ணீரால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது.

விடுமுறை நாட்களில் பள்ளி குழந்தைகள் ஏரிகளுக்கு சென்று குளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

எனவே மாணவ மாணவிகளின் நலன் கருத்தில்கொண்டு நீர்நிலைப் பகுதிகளில் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News