செய்திகள்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைக்கப்படும் நினைவு மண்டபத்தின் மாதிரி புகைப்படத்தை படத்தில் காணலாம்.

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிட பணிகள் 90 சதவீதம் நிறைவு

Published On 2020-02-11 01:51 GMT   |   Update On 2020-02-11 01:51 GMT
ஜெயலலிதாவின் நினைவிட பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளதாகவும், அங்கு அமைக்கப்பட்டு வரும் பீனிக்ஸ் பறவையின் ராட்சத சிறகு மற்றும் உதிரி பாகங்கள் துபாயில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை :

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் சமாதியை பார்ப்பதற்கு ஏராளமான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பார்வைக்கு ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படுகிறது. ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்க டெல்லியில் இருந்து முக்கிய தலைவர்களை அழைக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.



நினைவு மண்டப பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஜெயலலிதா நினைவு மண்டபம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. ராட்சத கிரேன்கள், கலவை எந்திரங்கள் உதவியுடன் தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது.

பீனிக்ஸ் பறவை இறக்கை மாதிரி அமைக்கும் கடினமான பணி நடந்து வருகிறது. இது சவாலான பணி என்பதால் துபாயில் இருந்து கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்துள்ள ஆலோசனைப்படி பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் அருகே இரும்பு தகரத்தினால் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் சமாதியை, எம்.ஜி.ஆர். நினைவு மண்டபம் அருகே இருந்தபடி பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து உள்ளன.

முழுமையாக பணிகள் நிறைவடைந்த உடன் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். திறப்பு விழா எப்போது என்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்து முறையாக அறிவிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News