செய்திகள்
கைது

மோடியை அவதூறாக பேசிய என்ஜினீயர் கைது

Published On 2020-02-10 09:37 GMT   |   Update On 2020-02-10 09:37 GMT
சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் அருகே பாரதிய ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் அருணாசலம் சாலையில் நேற்று மாலை பாரதிய ஜனதா கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மேலிட பொறுப்பாளர் முரளிதர்ராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், நயினார் நாகேந்திரன், ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு முக்கிய நிர்வாகிகள் அங்கிருந்து சென்றனர்.

சிறிது நேரத்தில் பொதுக்கூட்டம் நடந்த மேடையின் அருகே உள்ள வீட்டின் மாடியில் நின்ற வாலிபர் ஒருவர் ‘ஐ ஹேட் மோடி’ என்று 3 முறை கோ‌ஷமிட்டார். மேலும் பிரதமர் மோடி பற்றியும், அவதூறாகவும் பேசினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதா தொண்டர்கள் வீட்டின் மாடியில் நின்ற வாலிபர் மீது கற்களை வீசினர். அந்த வாலிபரும் கல் வீசினார். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த வீட்டுக்குள் செல்ல பா.ஜனதா தொண்டர்கள் முயன்றனர், அவர்களை போலீசார் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

பின்னர் போலீசார், மாடியில் நின்று கூச்சலிட்ட வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்த கனகநாதன் (26) என்பதும் தெரிந்தது.

சரியான வேலை கிடைக்காததால் ஓட்டலில் தங்கி வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News