செய்திகள்
கொரோனா வைரஸ்

சீன மக்களின் உணவு முறைகளால் தான் கொரோனா வைரஸ் பரவியது- ஓசூர் மாணவர்

Published On 2020-02-01 04:59 GMT   |   Update On 2020-02-01 05:03 GMT
சீன மக்களின் உணவு முறைகளால் தான் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது என்று ஓசூர் திரும்பிய மருத்துவ மாணவர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

ஓசூர்:

சீனாவில் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி, பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்தவாறு உள்ளது.

இந்த நிலையில், சீனாவில் உள்ள ஜிங்சாங் புரோவின் என்ற பகுதியில் இயங்கி வரும் நிங்போ மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இந்திய மாணவர்கள் 400 பேரை பாதுகாப்பு கருதி, மருத்துவக் கல்லூரி நிர்வாகம் இந்தியாவிற்கு அனுப்பி உள்ளது.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 21) என்ற மாணவரும் ஒருவர் ஆவார். இவர் ஓசூரில், தளி சாலையில் உள்ள ஈடன் கார்டன் குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் முருகவேல் குமரன் என்பவரது மகன் ஆவார்.

இந்த மாணவர் கடந்த 25-ம்தேதி சீனாவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் ஓசூர் வந்தடைந்தார். பின்னர் டாக்டர்களின் அறிவுரைப்படி ஓசூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து, நாள் தோறும் மருத்துவக் குழுவினர் அவரது வீட்டுக்கு சென்று சந்திர சேகரனுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து வருகின்றனர். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவுமில்லை என்றபோதிலும் சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ளதால் அவருக்கு மருத்துவ அதிகாரிகள் சில அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

வீட்டில் அவர் சுத்தமாக இருக்க வேண்டும், வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும், நன்கு வேக வைத்த உணவுகளையும், இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர்கள் அந்த மாணவருக்கு அறிவுரைகள் வழங்கி, அதன்படி நடந்து கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது குறித்து மாணவர் சந்திரசேகரன் கூறியதாவது:-

சீனாவில் வவ்வால்களிடம் இருந்து பாம்புகளுக்கும், அதனைத் தொடர்ந்து மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவி உள்ளது. சீனர்களின் உணவு முறைகளால் தான் இந்த வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.

எங்கள் கல்லூரி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தேன், ஓசூர் பகுதியில் தங்கி இருக்க வேண்டும் என்றும், வருகிற 21-ந்தேதி சீனாவிற்கு திரும்பி, கல்லூரிக்கு வருமாறும் கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News