திருச்சியில் முன்விரோத தகராறில் மீன் மார்க்கெட் தொழிலாளியை கொலை செய்த நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சியில் மீன் மார்க்கெட் தொழிலாளி கொலை
பதிவு: ஜனவரி 16, 2020 20:15
கொலை
திருச்சி:
திருச்சி பாலக்கரை அருகே உள்ள கூனிபஜார் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சந்தோஷ் (வயது 26). இவர் புத்தூர் மீன் மார்க்கெட்டில் மீன் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தோஷ் உடலில் வெட்டு காயங்களுடன் தில்லைநகர் உழவர் சந்தை அருகில் உள்ள முள் காட்டில் பிணமாக கிடந்தார்.
அவரது தலையை அடையாளம் தெரியாமல் இருக்க பெரிய கல்லை தூக்கிபோட்டு சிதைத்திருந்தனர். இதுகுறித்து தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில் சந்தோஷ், அவரது நண்பர்கள் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், இந்நிலையில் நேற்று முன்தினம் உழவர் சந்தை அருகில் மது அருந்தி உள்ளனர். அப்போதுபோதையில் தகராறு ஏற்பட்டு சந்தோஷ் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக சந்தோஷின் நண்பர் அருண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தில்லைநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.