செய்திகள்
கைதானவர்களை படத்தில் காணலாம்

நாமக்கல்லில் குழந்தையை கடத்துவதாக கூறி 10 லட்சம் கேட்டு மிரட்டல் - 3 பேர் கும்பல் கைது

Published On 2020-01-13 11:39 GMT   |   Update On 2020-01-13 11:39 GMT
நாமக்கல்லில் குழந்தையை கடத்துவதாக கூறி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 42). இவர் மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீதரிடம் கூலிப்பட்டியை சேர்ந்த தேவேந்திரன் (22) என்பவர் டிரைவராக பணி புரிந்து வந்தார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டார். இதனால் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டபட்டு வந்தார். இதையடுத்து தேவேந்திரன் தனது நண்பர்கள் விக்னேஷ் (22), விஜய் (22), ஆகியோருடன் சேர்ந்து ஸ்ரீதரிடம் பணம் பறிக்க திட்டம் இட்டார். இதையடுத்து அவர்கள் போன் மூலம் ஸ்ரீதரை தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது ரூ. 10 லட்சம் தராவிட்டால் பள்ளியில் இருக்கும் உனது குழந்தைகளை கடத்தப் போவதாக மிரட்டினர். இதனால் அதிரச்சி அடைந்த ஸ்ரீதர் இது குறித்து நாமக்கல் போலீசில் புகார் கொடுத்தார். ஸ்ரீதருக்கு அவர்கள் மீண்டும் தொடர்ந்து போன் செய்தனர். அப்போது போலீசார் கூறியபடி அவர் நான் வெளியூர் சென்று விட்டதாக கூறினார்.

இதனால் அவர்கள் அடிக்கடி போன் செய்வதை வைத்து 3 பேரும் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை கடத்துவதாக கூறி பணம் பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News