செய்திகள்
பழனியில் போலீசாருடன் தொழிற்சங்கத்தினர் வாக்குவாதம், தள்ளுமுள்ளில் ஈடுபட்ட காட்சி.

தொழிற்சங்கத்தினர் போராட்டம்- ரெயில் மறியலுக்கு முயன்ற 250 பேர் கைது

Published On 2020-01-08 06:39 GMT   |   Update On 2020-01-08 06:39 GMT
பழனியில் ரெயில் மறியலுக்கு முயன்ற 250 பேரை போலீசார் கைது செய்து செய்தனர்.

பழனி:

பழனியில் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் ரெயில் மறியலுக்கு முயன்றபோது போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட பல்வேறு சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அனைத்து துறை ஊழியர் சங்கங்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு குறைந்த அளவு ஊழியர்களே வந்தனர். மேலும் வங்கி, போஸ்ட் ஆபீஸ் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பழனியில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு மாநில குழு உறுப்பினர் பாண்டி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜமாணிக்கம், நிர்வாகிகள் கந்தசாமி, குருசாமி உள்பட கட்சியினர் ரெயில் மறியலுக்கு முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்தனர். ஆனால் அதனையும் மீறி உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும், கம்யூனிஸ்ட்டு கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்திலடி ஈடுபட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News