செய்திகள்
விபத்து

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2019-12-20 09:56 GMT   |   Update On 2019-12-20 09:56 GMT
தஞ்சை அருகே இன்று காலை நடந்து சென்ற தொழிலாளி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் ராராமுத்திரைகோட்டை அருகே உள்ள கள்ளிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 53) தொழிலாளி.

இவர் இன்று காலை மாரியம்மன்கோவில் அருகே உள்ள புலவர்நத்தத்தில் உள்ள ஒரு கடையில் டீ குடித்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு சாலையோரம் நடந்து சென்றார்.

அப்போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து வந்து கொண்டிருந்தது. திடீரென நடந்து சென்ற ராமு மீது மோதியது. இதில் ராமு பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய நபருக்கும் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த நபர் அங்கேயே மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த ராமுவை மீட்டனர். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதாக தெரிகிறது. இதில் ராமு பரிதாபமாக இறந்தார். ஆம்புலன்ஸ் சரியான நேரத்துக்கு வந்திருந்தால் ராமுவின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து ராமுவின் உடலை தஞ்சை-நாகை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதை கண்டித்தும், விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்யக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இறந்த ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சுமார் 1 மணி நேரம் நடந்த மறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணி வகுத்து நின்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News